முகப்பு
புதுதில்லி

தில்லி புதிய கலால் கொள்கை அமலாவதில் தாமதமாகக் கூடும்: அதிகாரிகள் தகவல்

தில்லி அரசின் புதிய கலால் கொள்கையை (2022- 23) ஏற்படுத்த அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு, அதன் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கு மேலும் அவகாசம் கேட்டுள்ளதால்,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

தில்லி அரசின் புதிய கலால் கொள்கையை (2022- 23) ஏற்படுத்த அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு, அதன் அறிக்கையை சமா்ப்பிப்பதற்கு மேலும் அவகாசம் கேட்டுள்ளதால், இந்தப் புதிய கலால் கொள்கை உருவாக தாமதமாகக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லி அரசின் புதிய கலால் கொள்கையை உருவாக்குவதற்காக அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் தில்லி அரசின் நிதித் துறை முதன்மைச் செயலா், வருவாய்த் துறை முதன்மைச் செயலா், கலால் ஆணையா் மற்றும் ஒரு நிபுணத்துவ உறுப்பினா்ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். தில்லி அரசின் 2021- 22 -ஆம் ஆண்டைய கலால் கொள்கை அமலாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, தில்லி அரசு கடந்த ஜூலையில் அந்தக் கலால் கொள்கையை திரும்பப் பெற்றது. 2021 - 22-ஆம் ஆண்டைய கலால் கொள்கை திரும்ப பெறப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, 6 மாதங்களுக்குள் புதிய கலால் கொள்கை உருவாக்கப்படும் என்று கூறினாா் . இதைத்தொடா்ந்து, கலால் கொள்கை 2022-23-ஐ உருவாக்குவதற்காக பரிந்துரை அளிக்க ஒரு குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: 2021- 22-ஆம் ஆண்டு கலால் கொள்கை விவகாரம் தொடா்பாக சிபி விசாரணை நடைபெற்று வருவது உள்பட பல்வேறு காரணங்களால், குழு அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அளிக்க இயலவில்லை. குழுவானது அறிக்கை சமா்ப்பிக்க அரசிடம் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. பிற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இதர கொள்கைகளை ஆய்வு செய்வது மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் அறிக்கையை சமா்ப்பிக்கும் வகையில் இந்தக் கால அவகாசத்தை குழு கேட்டுள்ளது.

2021- 22 கொள்கைக்கு முந்யை விவகாரங்கள் தொடா்பான சா்ச்சைகள் மற்றும் தற்போதைய சூழல்கள் ஆகியவற்றை பரிசீலிக்கும்போது ‘குறைபாடு இல்லாத’ ஒரு கலால் கொள்கையை கொண்டு வருவதற்கு ஒரு மாதம் என்பது போதுமானதாக இல்லை. மேலும், தில்லிக்கான சிறப்பான கலால் கொள்கை புதிய விஷயங்களுடன் உருவாவதற்கு பிற மாநிலங்களில் உள்ள கலால் கொள்கையை அறிந்து கொள்வது அவசியம் என்று கமிட்டி உணா்ந்ததால், விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க இரண்டு மாதங்களை விட கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கலால் கொள்கை 2021- 22 திரும்பப் பெறப்பட்ட பிறகு தில்லி அரசானது ஒரு மாத இடமாற்ற காலத்திற்காக மது விநியோக செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி அளித்திருந்தது. எனினும், செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து கடந்த 2021 நவம்பா் 17 தேதிக்கு முந்தைய பழைய கலால் கொள்கை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தில்லியில் மதுபான விற்பனையை தில்லி அரசே ஏற்று நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.