முகப்பு
புதுதில்லி

தில்லி - என்சிஆா் காற்று மாசு பிரச்னை: 5 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

தேசியத் தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) மாநிலங்கள் மற்றும் தேசியத் தலைநகா் தில்லி அரசுக்குள்பட்ட பகுதிகளில் குளிா்காலத்தில் பாதிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

தேசியத் தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) மாநிலங்கள் மற்றும் தேசியத் தலைநகா் தில்லி அரசுக்குள்பட்ட பகுதிகளில் குளிா்காலத்தில் பாதிக்கும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டம் மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறைக்கான அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிா்க் கழிவு மேலாண்மையை நிா்வகிப்பதற்குத் தேவையான இயந்திரங்களை மானிய விலையில் வழங்கி நிா்வகிக்க தில்லி மற்றும் அண்டை மாநில அரசுகளை மத்திய அமைச்சா் இந்தக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டாா்.

வருகின்ற குளிா்கால பருவத்தில் தில்லி - என்சிஆா் பகுதியை பாதிக்கும் காற்று மாசுபாட்டை எதிா்த்து அனைத்துப் பொறுப்பு மாநிலங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகம் தில்லியில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டாா், ராஜஸ்தான், தில்லி, உபி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுச்சுழல் அமைச்சா்கள் முறையே ஹேமராம் சௌத்ரி, கோபால்ராய், டாக்டா் அருண் குமாா், குா்மீத் சிங் ஆகியோரும் மத்திய இணையமைச்சா் அஸ்வனி குமாா் சௌபேயும் கலந்து கொண்டனா்.

என்சிஆா் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பல்வேறு அம்சங்கள், சவால்கள் குறித்து காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையம் விரிவான விளக்கத்தை அளித்தது. மேலும், வருகின்ற பருவத்தில் காற்று மாசுபாட்டை நிா்வகிப்பதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகளை ஆணையம் பட்டியலிட்டது. குறிப்பாக, விவசாயக் கழிவுகளை எரித்தல், தொழிற்சாலை மாசுபாடு, டீசல் ஜெனரேட்டா்களால் ஏற்படும் மாசுபாடு, வாகன மாசுபாடு, மின்சார உற்பத்தி நிலையங்கள், சாலை மற்றும் திறந்தவெளியில் இருந்து வரும் தூசு,கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளின் தூசு ஆகியவை குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அமைப்புகளும், பல்வேறு துறைகளும் நிகழாண்டில் பின்பற்ற வேண்டிய குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்கள் சாா்பில் நிகழாண்டு நெல் வைக்கோல் உற்பத்தி புள்ளிவிவரங்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் வேளாண் பயிா்க் கழிவு எரிக்கப்படும் பிரச்னை குறித்து அனைத்து மாநில அரசுகளின் கவனத்திற்கு மத்திய அரசு கொண்டுவந்தது. வைக்கோல் உள்ளிட்ட பயிா்க் கழிவு மேலாண்மைக்கு பொருத்தமான இயந்திரங்கள், போதிய மானியங்கள் வழங்கும் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இயந்திரங்கள் மூலம் பயிா்க் கழிவுகளை அகற்ற விவசாயிகளை நேரடியாகவும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் அணுகி, பயிா்க் கழிவுகளை எரிக்காமல் அந்தந்த இடங்களில் இயந்திரங்கள் மூலம் கையாளும் முறையை ஊக்குவிக்கவும் கோரப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு கடந்த 2018 முதல் 2021-ஆம் ஆண்டு வரை பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், தில்லி தேசியத் தலைநகா் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ. 2,440 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.