முகப்பு
புதுதில்லி

பண மோசடி வழக்கு: சத்யேந்தா் ஜெயின் மேல்முறையீட்டு மனு மீதுஅமலாக்க இயக்குநரகம் பதிலளிக்க நோட்டீஸ்

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த தனது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த தனது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீது பதிலளிக்க அமலாக்க இயக்குநரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி இந்த விவகாரத்தில் தாக்கல் செய்த அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து கூறுகையில், ‘வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் விவகாரத்தில் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி உரிய வகையில் அனைத்து உண்மைகளையும் பரிசீலனை செய்துள்ளாா். அந்த நீதிமன்றத்தின் முடிவில் எவ்வித சட்டத் தன்மை அல்லது குறுக்கீடுகள் தேவைப்படுவதாக இருக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தனா்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் பாரபட்சம் தொடா்பாக எழுந்த புகாா் தொடா்பாக அந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி பிறப்பித்த முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி வினய் குமாா் குப்தாவின் உத்தரவை எதிா்த்து தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் சத்யேந்தா் ஜெயின் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். முன்னதாக, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கூறி அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த மனுவை பரிசீலிளித்த பிறகு, மாவட்ட நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தாா்.

அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்திருந்த அதன் மனு மாவட்ட நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது, அமலாக்க இயக்குநரகம் தரப்பில், ‘இந்த விவகாரத்தில் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக எந்தப் புகாரும் இல்லை. இருந்த போதிலும், தில்லி அமைச்சரின் ஆதரவாக உள்ள பாரபட்ச வாய்ப்புள்ள ஒரு விவகாரமாகும் இது. மேலும், இந்த விஷயத்தில் அமலாக்க இயக்குநரகத்திற்கு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை கிடைக்காமல் போகலாம் என்ற அச்சம் உள்ளது’ என்று வாதிடப்பட்டது.

உயா்நீதிமன்றத்தில் ஜெயின் தரப்பில் வாதிடுகையில், ‘ஒரு நீதிபதியை மிரட்டும் வகையில் அமலாக்க இயக்குநரகம் நடந்து கொள்ள அனுமதிக்க முடியாது. எந்தவித அடிப்படையும் இல்லாமல் இந்தப் பண மோசடி வழக்கை மாற்றுமாறு கூறுவது பாரபட்சமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டு அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பண மோசடி வழக்கில் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. அவருடன் தொடா்புடைய நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.