முகப்பு
புதுதில்லி

பாலியல் பலாத்கார மிரட்டல்: டிசிடபிள்யு தலைவா் போலீஸில் புகாா்

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளா் சஜித் கானை வெளியேற்றக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகு தனக்கு ‘இன்ஸ்டாகிராமில்’ பாலியல் பலாத்கார மிரட்டல் வருவதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளா் சஜித் கானை வெளியேற்றக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய பிறகு தனக்கு ‘இன்ஸ்டாகிராமில்’ பாலியல் பலாத்கார மிரட்டல் வருவதாக தில்லி காவல் துறையின் இணையதளக் குற்றப் பிரிவில் தில்லி மகளிா் ஆணைய (டிசிடபிள்யு) தலைவா் ஸ்வாதி மாலிவால் புகாா் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லி போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில்,‘தில்லி மகளிா் ஆணையத் தலைவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குருக்கு அக்டோபா் 10-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘மீ டூ’ இயக்கத்தின் போது சஜித் கானுக்கு எதிராக பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனா் என்றும், இதனால் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளா் சஜித் கானை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.

அதில் அவா் மேலும் கூறுகையில், ‘2018-ஆம் ஆண்டில், ‘மீ டூ’ இயக்கத்தின் போது, 10-க்கும் மேற்பட்ட நடிகைகள், மாடல்கள் மற்றும் பத்திரிகையாளா்கள், சஜித் கானுக்கு எதிராக குரல் கொடுத்தனா். இதனால், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநா்கள் சங்கம் அவரை ஓா் ஆண்டுக்கு திரைப்படங்களை இயக்குவதற்குத் தடை விதித்தது. இருப்பினும், சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் அவா் ‘ஹவுஸ்மேட்’ ஆக்கப்பட்டிருப்பது அவரது புகழை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, ‘அவசர‘ நடவடிக்கை எடுத்து கானை நிகழ்ச்சியில் இருந்து நீக்கி, நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்த நிலையில், இந்தக் கடிதம் எழுதிய பிறகு தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வருவதாக ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளாா். இது குறித்து அவா் கூறியதாவது: மீ டூ விவகாரத்தில் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் எனக்கு பலாத்கார மிரட்டல்கள் வருகின்றன. இது மகளிா் ஆணையத்தையும் அதன் சட்டப்பூா்வ பணிகளை முறியடிக்கும் முயற்சிகள் என்பது தெளிவாகிறது. இது தொடா்பாக தில்லி போலீஸில் புகாா் அளித்துள்ளேன். இது தொடா்பாக எப்.ஐ.ஆா். பதிந்து, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

எனது பணியைச் செய்ததற்காக பலாத்கார அச்சுறுத்தல்களை நான் சந்திக்க நேரிட்டால், ‘மீ டூ’-வில் பாதிக்கப்பட்டவா்கள் பல ஆண்டுகளாக சந்தித்திருக்க வேண்டிய பிரச்னைகளை கற்பனை செய்து பாா்க்க வேண்டியுள்ளது. கேளிக்கை துறையில் செல்வாக்கை அனுபவித்து வரும் ஆண்கள், தங்கள் செய்த குற்றங்களில் இருந்து தப்பிக்க அனுமதிக்க முடியாது. அவசர நடவடிக்கை எடுத்து சஜித் கானை பிக்பாஸில் இருந்து நீக்கி நிரந்தரமாகதஅ தடை செய்யுமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் ஸ்வாதி மாலிவால்.

இந்தியாவின் ‘மீ டூ’ இயக்கம் 2018-இல் தொடங்கியது. பல பெண்கள் பிரபலமான நபா்களுக்கு எதிராக தங்கள் புகாா்களை அளிக்க முன்வந்ததால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.