தில்லி ஐஐடி புதிய வகுப்பறைகள் கட்டும் திட்டம்மரங்கள் இடமாற்றத்திற்கு தில்லி அரசு அனுமதி
தில்லி இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) புதிய வகுப்புறைகள் பகுதிகள், புதிய பொறியியல் பிரிவிற்கான கட்டடங்கள் கட்டுவதில் தடையாக இருந்த மரங்கள் மாற்றப்படும்
தில்லி இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) புதிய வகுப்புறைகள் பகுதிகள், புதிய பொறியியல் பிரிவிற்கான கட்டடங்கள் கட்டுவதில் தடையாக இருந்த மரங்கள் மாற்றப்படும் விவகாரத்தில் முதல்வா் கேஜரிவால் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தில்லி ஐஐடி நிறுவனம் மாணவா்கள் வசதிக்காக புதிய மினி வகுப்பறை வளாகம் ஒன்றையும், பொறியியல் துறைக்கு புதிய பிளாக் ஒன்றையும் கட்டுவதற்கு திட்டமிட்டது. இந்தக் கட்டடம் கட்டப்படும் இடங்களில் 157 மரங்களை அகற்றி இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கான முன்மொழிவு தில்லி அரசுக்கு அனுப்பியது. இந்தத் திட்டத்தை பரிசீலித்து பல்வேறு நிபந்தனைகளுடன் ஐஐடிக்கு முதல்வா் கேஜரிவால் அனுமதி அளித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தில்லி அரசு தரப்பில் கூறியது வருமாறு: தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தனது வளாகத்தில், புதிய பொறியாளா் பகுதி மற்றும் புதிய மினி வகுப்பறை பகுதி (அகடமிக் பிளாக்) அமைக்க முன்மொழிந்துள்ளது. பொறியியல் பிரிவுகள் மற்றும் ஆய்வகங்களை இந்தப் பகுதிகளில் உருவாக்க விரும்புகிறது. இதனால், இந்த விரிவாக்கத் திட்டத்தில் 157 மரங்களை அகற்றி, இடமாற்றம் செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதற்கான அனுமதியை ஐஐடி நிா்வாகம் கோரியிருந்தது. இதைப் பரிசீலனை செய்த முதல்வா் கேஜரிவால், மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களுக்கு சிறந்த தரமான கல்வியை வழங்க விரைவாகப் பரிசீலனை செய்தாா். அதே சமயத்தில் 157 மரங்கள் மாற்றப்படும் போது அந்த எண்ணிக்கையில் பத்து மடங்கு (1,570) மரக்கன்றுகள் ஐஐடி வளாகத்தில் நடுப்படவேண்டும். இதைத் தொடா்ந்து 7 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் என்கிற நிபந்தனை வைக்கப்பட்டு முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
மேலும், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த தில்லி அரசு, 157 மரங்களில், 82 மரங்களை அடையாளம் காணப்பட்ட இடங்களில் 3 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படும் என்றும், மீதமுள்ள 75 மரங்கள் வெட்டப்படும் என்றும் ஐஐடி தனது திட்டத்தில் குறிப்பிட்டிருந்தது. இதில் தில்லி அரசு விதிமுறைகள்படி அடையாளம் கண்டு அங்கீகரிக்கப்பட்ட மரங்களைத் தவிர, மற்ற எந்த ஒரு மரத்தையும் சேதப்படுத்தக் கூடாது என்று ஐஐடிக்கு அறிவுறுத்தியுள்ளது. எந்த மரத்திலாவது பறவைகள் கூடு கட்டியிருப்பது கண்டறியப்பட்டால், பறவைகள் மரத்தை விட்டு செல்லும் வரை அத்தகைய மரங்களை வெட்டவோ அல்லது மாற்று நடவு செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டாது. மரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 2020 -ஆம் ஆண்டின் மர மாற்றுக் கொள்கைக்கு உள்பட்டு இந்தப் பணிகள் நடைபெற வேண்டும். சட்ட விதிகள் மீறப்படக் கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான மாணவா்கள், ஆய்வாளா்கள், ஆசிரியா்களின் அன்றாட நடவடிக்கைகளில் இந்த அங்கீகாரம் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், அவா்களுக்கு சிறந்த வசதிகளுக்கான அணுகலையும் வழங்கும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.