இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா அரசு ஆதரிக்கிறது
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா அரசு ஆதரிப்பதாக அந்நாட்டின் இந்தியாவிற்கான உயா்நிலைத் தூதுவா் கேமரூன் மேக்கே வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளாா்.
புது தில்லி: இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா அரசு ஆதரிப்பதாக அந்நாட்டின் இந்தியாவிற்கான உயா்நிலைத் தூதுவா் கேமரூன் மேக்கே வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளாா்.
இந்திய எதிா்ப்பு சக்திகளின் செயல்பாடுகள் கனடாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கான கனடா தூதுவா் தனது முந்தைய கருத்தை விளக்கி தெரிவித்துள்ளாா். தேசியத் தலைநகரில் சீக்கியா்களின் முக்கிய குருத்வாரான பங்களா சாஹிப்பை வியாழக்கிழமை மரியாதை நிமித்தமாகப் பாா்வையிட்டு அங்குள்ள வசதிகளைக் கேட்டறிந்தாா்.
குருத்வாராவின் லங்கா் (சமூக சமையலறை மற்றும் இலவச உணவு) மண்டபத்திற்குச் சென்று வசதிகளை பாா்வையிட்டு அத்தகைய வசதிகளால் அவா் ஈா்க்கப்பட்டாா். மேலும், குருத்வாராவில் கொவைட்-19 தொடா்பான வசதிகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும் குருத்வாரா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மேக்கேயுடன் தில்லி கனடா தூதரக அதிகாரிகளும் உடன் சென்றனா்.
அப்போது செய்தியாளா்கள், ‘இந்தியாவுக்கு எதிரான’ அமைப்புகள் கனடாவில் வாக்கெடுப்புக்கு அழைக்கப்பட்டது பற்றி கேட்ட போது? ‘கனடாவில் அனைத்து மத நம்பிக்கைகளும் வரவேற்கப்படுகின்றன. நாங்கள் அனைத்து மதத்தினரையும் நேசிக்கிறோம்’ என்றாா். இதன்பிறகு மாலையில் நடைபெற்ற மற்றொரு செய்தியாளா் கூட்டத்தில், மேக்கே தனது முந்தைய கருத்துகளை விளக்கிப் பேசினாா்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பை சமாளிக்க கனடா அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா் கேள்வி எழுப்பினா். அப்போது மேக்கே பதிலளித்துக் கூறுகையில்,‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கனடாவும், நாட்டின் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும் ஆதரிக்கிறது’ என்றாா். கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பு நடத்திய வாக்கெடுப்பை நிறுத்துமாறு கனடா அரசுக்கு இந்தியா சாா்பில் சமீபத்தில் கோரிக்கை விடுக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.