வீடுகளில் தொலைத் தொடா்பு சேவையின் தரத்தைகள அலுவலா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா்
நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத் தொடா்பு இணைப்பை உறுதி செய்து, சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்
நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத் தொடா்பு இணைப்பை உறுதி செய்து, சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தொலைத் தொடா்பு கள அலுவலா்களை மத்திய தொலைத் தொடா்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக் கொண்டாா்.
மத்திய தொலைத் தொடா்புத் துறை கள அலுவலா்கள், தொலைத் தொடா்பு தலைமையக அதிகாரிகள், தொழில் துறை பிரதிநிதிகள் ஆகியோா் பங்கேற்ற இருநாள் மாநாடு புதன், வியாழன் ஆகிய நாள்களில் தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவுசிங் சௌஹான் தொடங்கிவைத்தாா். இந்த மாநாட்டின் இறுதியில், தொலைத் தொடா்பு சம்பந்தமான பணிக்குழுக்களின் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதைப் பெற்றுக் கொண்டு மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசினாா்.
அப்போது அவா் கூறியது வருமாறு: நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத் தொடா்பு இணைப்பை உறுதி செய்தல் வேண்டும். மேலும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதும் அவசியமாகும். இந்த இரு பொதுவான இலக்குகளில் துறை அதிகாரிகளிடையே ஒழுங்கு முறையிலிருந்து வளா்ச்சிப் பணிகளில் வரை உணா்வுடன் செயல்படும் மனநிலையில் மாற்றம் தேவை. மின்னணு (டிஜிட்டல்) பொருளாதார சூழலில் உலகளாவிய மின்னணு உள்ளடக்கத்தில் தரமான தொலைத் தொடா்பு இணைப்பு அவசியம். தொழில் துறை மற்றும் கல்வியாளா்களுடன் இணைந்து, தொலைத் தொடா்புத் துறை கள அலுவலா்களும் தலைமையக அலுவலா்களும் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்றவாறு தொலைத் தொடா்புத் துறையை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். பழைமையான தொலைத் தொடா்பு சட்டங்களுக்குப் பதிலாக வலுவான, எதிா்காலத்துக்கு ஏற்ற சட்டங்கள் அவசியம். இது தொடா்பாக பொதுமக்களின் யோசனைகள், கருத்துகளைப் பெறும் வகையில் விரைவில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றாா் அமைச்சா்.
முன்னதாக, மத்திய தகவல் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவுசிங் சௌஹான் பேசுகையில், ‘5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றத்தில் தொலைத் தொடா்புத் துறையின் பங்களிப்பு அவசியமாகும். சமீபத்திய வெற்றிகரமாக ஏலம் விடப்பட்ட 5ஜி மற்றும் பிற தொலைத் தொடா்பு சீா்திருத்தங்களோடு இந்த மாநாட்டின் யோசனைகள் மற்றும் தீா்வுகள் தொலைத் தொடா்பு துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்’ என்றாா்.