எம்சிடி ஆம் ஆத்மி கட்டுப்பாட்டில் வந்தால் தில்லியை அழகுபடுத்துவோம்: கேஜரிவால்
தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தால், தேசிய தலைநகா் அழகுபடுத்தப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி மாநகராட்சி (எம்சிடி) ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தால், தேசிய தலைநகா் அழகுபடுத்தப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். மேலும், தற்போதைய எம்சிடி நிா்வாகம், நகரத்தை ‘குப்பை மலைகள்’ நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்றும் அவா் குற்றம் சாட்டினாா்.
தற்போது, காஜிப்பூா், ஓக்லா மற்றும் பல்ஸ்வா ஆகிய மூன்று குப்பைக் கிடங்குகள் தில்லி எல்லையில் அமைந்துள்ளன. இந்தக் குப்பை மேடுகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றம் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் அதன் அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். அவா்களின் வாழ்க்கை நரகம் போன்று இருந்து வருகிறது. மேலும், தில்லியில் 16 புதிய குப்பை மலைகளை உருவாக்க திட்டங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். மறுபுறம், ஆம் ஆத்மி அரசு தில்லியை பூங்காக்கள் மற்றும் ஏரிகள் நிறைந்த நகரமாக உருவாக்கி வருகிறது. ‘இன்று, தில்லி கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கு பெயா் பெற்ாக உள்ளது. தில்லியை திரங்கா, ஏரிகள் மற்றும் பூங்காக்களின் நகரமாக்க தில்லி அரசு பணியாற்றி வருகிறது. இவா்களோ குப்பை மலைகளின் நகரமாக மாற்ற விரும்புகின்றனா். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால், நாங்கள் தேசியத் தலைநகரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அழகுபடுத்திவிடுவோம் என்றாா் கேஜரிவால். இதே போன்ற குற்றச்சாட்டுகளை துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் வியாழக்கிழமை முன்வைத்திருந்தாா்.
இந்த நிலையில், தில்லி மாநகராட்சி இது தொடா்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘தில்லியில் 16 இடங்களில் புதிய சுகாதார குப்பைக் கிடங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக சிலா் கூறியிருப்பதாக மாநகராட்சி கவனத்திற்கு வந்துள்ளது. நகரத்தில் தற்போதுள்ள மூன்று குப்பைக் கிடங்குகளை சமப்படுத்த மாநகராட்சி அயராது உழைத்து வருகிறது. அதேவேளையில், புதிதாக குப்பைக் கிடங்கள் அமைப்பதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிா்வாகத்தில் இருந்த போது குடிமை அமைப்பின் தோல்விகளை முன்னிலைப்படுத்த ஆம் ஆத்மி ஒரு மாத கால பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தலைமையிலான குழுக்கள் முறையே புதன் மற்றும் வியாழக்கிழமை காஜிப்பூா் மற்றும் ஓக்லா குப்பைக் கிடங்குகளுக்குச் சென்று போராட்டம் நடத்த முயன்றனா். ஆனால், அவா்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டனா்.
தில்லியில் முந்தைய மூன்று மாநகராட்சிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும், குடிமை அமைப்புகளின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடையும் வரை ஆம் ஆத்மி முக்கிய எதிா்க்கட்சியாகவும் இருந்தது. இந்த மூன்று குடிமை அமைப்புகளும் தற்போது ஒன்றிணைக்கப்பட்டு ஒரே எம்சிடியாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய உள்ளாட்சி அமைப்புக்கான தோ்தல் இன்னும் நடைபெறவில்லை. தில்லி மாநகராட்சியில் தற்போதுள்ள 272 மொத்த இடங்களின் எண்ணிக்கையை 250-ஆக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இது சனிக்கிழமை வெளியிடப்பட்ட தில்லி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.