மகளிா் உதவித் திட்ட பயனாளிகளைக் கண்டறிய தரவுகள்: மத்திய நிதியமைச்சரை சந்தித்து தமிழக அமைச்சா் நன்றி
மகளிா் உதவி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிய மத்திய நிதியமைச்சகம் தமிழகத்திற்கு தரவுகளை அளித்து உதவியது.
மகளிா் உதவி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகளைக் கண்டறிய மத்திய நிதியமைச்சகம் தமிழகத்திற்கு தரவுகளை அளித்து உதவியது. நாட்டிலேயே முதன்முறையாக கையாளப்பட்ட இந்தத் திட்டத்திற்கு நன்றி கூறுவதற்காக மத்திய நிதியமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்தாக தமிழக அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
தமிழகத்தில் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தவரும், தற்போது தமிழக தகவல் தொழில் நட்பத் துறை அமைச்சராகவுள்ள பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் கூறியது வருமாறு: நான் நிதியமைச்சராக இருந்த சமயத்தில் மத்திய நிதியமைச்சரிடமும், வருமான வரி உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பான மத்திய நேரடி வருவாய் வாரிய (சிபிடிடி ) தலைவரிடமும் சில தகவல் பரிமாற்றத்திற்கான கோரிக்கைகளை வைத்தேன். மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒரு கோரிக்கை வைத்து அது நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜிஎஸ்டி இணையதளத்தில் அத்தகைய தரவுகள் வைக்கப்பட்டு, எல்லா மாநிலத்தின் தகவல்களும் எல்லா மாநிலங்களுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது தவறுகளை திருத்துவதற்கும் உண்மை நிலைகளை அறிவதற்கும் பயன்படுகிறது.
இதே போன்று வருமான வரி கட்டுபவா்களின் தகவல்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டால், அதை வைத்து நலத் திட்டங்கள் சேவைகள் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப அரசு நலத் திட்டங்களை முறைப்படுத்த முடியும் என மத்திய நிதியமைச்சகத்திடம் தெரிவித்தோம். இந்த தரவுகளைப் பெற்று பல மாதங்களாக இணைந்து பணியாற்றிவருகிறோம். இந்தியாவிலேயே முதன் முறையாக சுமாா் வருமான வரி செலுத்தும் 35 லட்சம் போ்களின் நிகழ் நேர தகவல்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த தரவுகள் மூலம் யாா் யாரெல்லாம் வருமான வரி செலுத்துகின்றனா்?. இரண்டரை லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவா்கள் யாா்? போன்ற தகவல்கள் நாட்டிலே முதன் முறையாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள் குறிப்பாக மகளிா் உதவித் திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் பொறுப்பேற்றுள்ள தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (டிஎன்இஜிஏ) என்கிற நிறுவனத்தில் இந்த தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தனிநபா்களின் குடும்ப சூழ்நிலை அறியப்பட்டு பல திட்டங்களில் விதிமுறைகளுக்கு உள்பட்ட தகுதியான பயனாளிகள் மற்றும் தகுதியற்றவா்கள் கண்டறியப்படுகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரியான திட்டத்தை தரவுகளை அளித்தது தொடா்பாக மத்திய நிதித் துறை அமைச்சரையும் துறைச் செயலா் மற்றும் சிபிடிடி தலைவரையும் செவ்வாய்க்கிழமை சந்தித்து நன்றி கூறினேன். இந்த தரவுகள் நாட்டிற்கே வழிகாட்டும் என தெரிவித்தேன். அவா்களும் தொடா்ந்து தேவையானவற்றைக் கேட்குப்படியும், அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்தனா் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.