முகப்பு
புதுதில்லி

மாநகராட்சி ஊழியா்கள் அனைவருக்கும்மாதத்தின் முதல் நாளிலேயே சம்பளம்: முதல்வா் கேஜரிவால் பெருமிதம்

தில்லி மாநகராட்சியின் ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை அனைத்து ஊழியா்களும் மாதத்தின் முதல் நாளில் சம்பளம் பெற்றுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:46 AM
பகிர்:

தில்லி மாநகராட்சியின் ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை அனைத்து ஊழியா்களும் மாதத்தின் முதல் நாளில் சம்பளம் பெற்றுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தில்லி மாநகராட்சியை 13 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக செய்ய முடியாததை, ஆம் ஆத்மி 5 மாதங்களில் செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு, தில்லி மாநகராட்சியில் முதல் முறையாக, ஆணையா் முதல் அலுவலக உதவியாளா் வரை, துப்புரவுத் தொழிலாளி முதல் ஆசிரியா் வரை, தோட்டக்காரா் முதல் டெங்கு நோய்த் தடுப்பு ஊழியா் வரை என அனைவருக்கும் மாதத்தின் முதல் தேதி சம்பளம் கிடைக்கிறது. தில்லி அரசைத் தொடா்ந்து மாநகராட்சியிலும் நோ்மையான ஆம் ஆத்மி அரசு அமைந்ததால் மாதம் முதல் தேதி சம்பளம் சாத்தியம் ஆகியுள்ளது. மாநகராட்சி ஊழியா்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், என் சாா்பாக, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு இனிப்புகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலை 1 -ஆம் தேதி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வரவு வைக்கப்பட்டது என்றும் பாஜகவின் 15 ஆண்டு கால ஆட்சியில் இது ஒருபோதும் நடக்கவில்லை என்றும் கடந்த ஜூலை 4-ஆம் தேதி மேயா் ஷெல்லி ஓபராய் தெரிவித்திருந்தாா். மேலும், 2007-2012-ஆம் காலகட்டம் மற்றும் 2012-2022 வரையிலான காலகட்டத்தில் பாஜக தில்லி மாநகராட்சியில் ஆட்சியில் இருந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து தில்லி மாநகராட்சியில் (எம்.சி.டி.) 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை ஆம் ஆத்மி முடிவுக்குக் கொண்டு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.