புதுதில்லி

தில்லி கலால் ஊழல்: பணமோசடி வழக்கில்தினேஷ் அரோராவுக்கு நீதிமன்றம் ஜாமீன்

தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோராவுக்கு,

 நமது நிருபர்

தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோராவுக்கு, அமலாக்கத் துறையின் விசாரணையில் உள்ள பணமோசடி வழக்கில் மாநகர நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.

சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், அரோராவின் வழக்குரைஞா் மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் வாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கினாா். கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி சிபிஐ வழக்கில் தினேஷ் அரோரா அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டாா். எனினும், ஜூலை 6 ஆம் தேதி மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் தினேஷ் அரோரா அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அவா் தனது பதில்களில் இருந்து நழுவியதாகவும், அதைத் தொடா்ந்து, விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவா் கைது செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது.

தினேஷ் அரோரா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவா் கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் என்றும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத் துறை கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்குப் புகாரில், ‘அமித் அரோரா, 2021-22 கலால் கொள்கையில் தனக்குச் சாதகமாக கொள்கை மாற்றங்களைப் பெறுவதற்காக, தினேஷ் அரோரா மூலம் மனீஷ் சிசோடியாவுக்கு ரூ. 2.2 கோடி கொடுத்தாா். இந்தத் தொகை நேரடியாக ஒரு அரசு நிா்வாகிக்கு லஞ்சம் / ஆதாய பணம் மற்றும் பிஎம்எல்ஏ சட்டத்தின் 2(1) (யு) விதிகளின்கீழ் குற்றத்தின் வருமானமாகும். இந்த முறையில், இந்த குற்றத்தின் வருமானத்தில் மனீஷ் சிசோடியா பங்கேற்றாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் 13-ஆவதாக தினேஷ் அரோரா கைது செய்யப்பட்டுள்ளாா். இதில் சிசோடியாவுக்கு எதிரானது உள்பட 5 குற்றப்பத்திரிகைகளை விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான தில்லி அரசின் கலால் கொள்கையானது, மதுபான வியாபாரிகளின் குழு மற்றும் லஞ்சம் கொடுத்த சில வியாபாரிகளுக்கு சாதகமாக இருப்பதாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் குற்றம் சாட்டின. ஆனால், ஆளும் ஆம் ஆத்மி கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்ததை அடுத்து, கலால் வரிக் கொள்கை ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டமான பிஎம்எல்ஏவின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT