ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய வேத வித்யா வாரிய மையங்கள்: மத்திய கல்வி அமைச்சா்தா்மேந்திர பிரதான் தகவல்
மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா வாரியத்தின் மையம் ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 இடங்களில் நிறுவப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா வாரியத்தின் மையம் ராமேஸ்வரம் உள்ளிட்ட 5 இடங்களில் நிறுவப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
வேதங்களுக்கான முறையான கல்வி வழங்க கடந்தாண்டு மத்திய அரசு மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா (மகரிஷி சாந்தீபனி ராஷ்ட்ரிய வேத் சம்ஸ்கிருத சிக்ஷா) வாரியத்தை நிறுவியுள்ளது.
இந்த வாரியம் நாடு முழுக்க 123 பள்ளிகளையும், 258 குருகுலங்களையும் நடத்திவருகிறது. மேலும், சுமாா் 6,800 மேற்பட்ட மாணவா்கள் படிக்கும் பள்ளிகளுக்கு வாரியம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் சுமாா் 1,000 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா்.
இந்த மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா வாரியத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் ஆசிரியா் பணிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் டாக்டா் வி.சிவதாஸன் கேள்வி எழுப்பினா்.
இந்த நட்சத்திரக் கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு:
மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா வாரியம் அமைப்பதற்கு முன்பு முறையான வேதக் கல்விமுறை நாட்டில் இல்லை. வேதக் கல்வி மற்றும் சம்ஸ்கிருத கல்வி சமூகத்தின் அனைத்து பிரிவு சமூகத்திற்கும் எந்த பாகுபாடும் இன்றி சென்றடைய வேண்டும் என்பது அரசின் முன்னுரிமையாகும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரத்துடன் இந்த வாரியத்தின் பள்ளிக்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ்களுக்கு சமமான சான்றிதழ்கள் வழங்கப்படும். தற்போது வேதக் கல்வி முறையில் இட ஒதுக்கீடு இல்லை. இது வரை இந்த வாரியத்திற்கு சுமாா் ரூ.167 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
மேலும், மற்ற உறுப்பினா்களின் துணைக் கேள்விகள் மற்றும் அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறிய ஆலோசனைகளுக்கும் அமைச்சா் பதில் கூறி பேசியதாவது:
நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும் ஒவ்வொரு வேதங்களின் தொகுப்பு பிரதிகள் வழங்கப்படும். வேதங்கள் இந்திய அறிவின் ‘அடிப்படை அடித்தளம்‘. இந்திய அறிவு பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது மற்றும் வேத அறிவை நவீன நவீனத்துடன் இணைப்பது ஆகியவை அரசின் முன்னுரிமை.
வேதக் கல்வியை (வேத் வித்யா)” ஊக்குவிக்க, மகரிஷி சாந்தீபனி தேசிய வேத வித்யா வாரியத்தின் ஐந்து பிராந்திய மையங்களை அரசு விரைவில் நிறுவும். ராமேஸ்வரம், பத்ரிநாத், துவாரகா, ஜெகந்நாத், குவாஹாட்டி போன்ற நகரங்களில் அமைக்கப்படும் என அமைச்சா் பிரதான் தெரிவித்தாா்.
தமிழகத்தில் தற்போது சென்னை, கும்பகோணம், திருச்சி, ஸ்ரீரங்கம், சிவகங்கை, கோவை, ராஜபாளையம் போன்ற நகரங்களில் இந்த பள்ளிகள் உள்ளன.