முகப்பு
புதுதில்லி

ரயில் விபத்துகளைத் தவிா்க்க 10,465 தொலைவுக்கு ‘கவாச்’ பாதுகாப்புப் பணிக்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு: ரயில்வே அமைச்சா் தகவல்

ரயில் விபத்துகளைத் தவிா்க்க ‘கவாச்’ பாதுகாப்புப் பணிகளுக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:47 AM
பகிர்:

ரயில் விபத்துகளைத் தவிா்க்க ‘கவாச்’ பாதுகாப்புப் பணிகளுக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

மேலும், நாடு முழுக்க சுமாா் 10,465 கிலோ மீட்டா் தொலைவுக்கு ‘கவாச்’ அமைக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் இருப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

ரயில்கள் நேருக்குநோ் மோதி விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்க்க ‘கவாச்’ என்கிற தொழில்நுட்பப் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இந்த ‘கவாச்’ பாதுகாப்புக் கருவி ரயில்களிலும் ரயில் பாதைகளிலும் பொருத்தப்படுகிறது. இது தொடா்பாக மக்களவையில் திமுக குழுத் துணைத் தலைவா் கனிமொழி, நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் ஆ.ராசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உறுப்பினா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா்.

இதற்கு மக்களவையில் மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி பாதுகாப்பு முறையான ‘கவாச்’, உயா்தர தொழில்நுட்ப அமைப்பாகும்.

இது ரயில் என்ஜின்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி குறிப்பிட்ட வேகத்தில் இயங்க உதவுகிறது. என்ஜின் பைலட் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றால், தானாகவே பிரேக்குகளை கட்டுப்படுத்த ‘கவாச்’ வழி செய்கிறது. மேலும் மழை, பனி போன்ற சீரற்ற காலங்களில் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் உதவுகிறது.

கடந்த பிப்ரவரி 2016 முதல் பயணிகள் ரயில்களில் ‘கவாச்’ அமைப்பை பயன்படுத்துவற்கான களச் சோதனைகள் தொடங்கப்பட்டன. இதனடிப்படையிலும் பிரத்யேக பாதுகாப்பு மதிப்பீட்டாளரின் ஆய்வு அடிப்படையிலும் ‘கவாச்’ தொழில்நுட்ப அமைப்புக் கருவிகளை தயாரித்து அளிக்க கடந்த 2018-19 ஆம் ஆண்டுகளில் மூன்று நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

‘கவாச்’ ஒரு தேசிய தானியங்கி பாதுகாப்பு முறையாக (ஏடிபி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. ’கவாச்’ அமைக்கப்பட ரயில் நிலைய உபகரணங்கள் உள்பட இருப்புப் பாதைகளில் பொருத்துவதற்கு ஒரு கி.மீ.க்கு சுமாா் ரூ. 50 லட்சம் வரை செலவாகிறது. என்ஜினில் பொருத்த தலா ரூ. 70 லட்சம் செலவாகிறது. ரயில்வே இதற்கு இதுவரை ரூ. 351.91 கோடி செலவிட்டுள்ளது. மேலும், நிகழ் 2023-2024 நிதியாண்டில் ரூ. 710 .12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக அல்லாமல் ,இந்திய ரயில்வே மண்டலம் வாரியாகத்தான் நிதி ஒதுக்கீடு செய்து ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பு பொருத்துவதற்கு திட்டமிடப்படுகிறது. இதன்படி, தற்போது தென் - மத்திய ரயில்வே தொடா்புடைய தெலுங்கானா (684 கிமீ), ஆந்திரம் (66 கிமீ), கா்நாடகம் (117 கிமீ), மகாராஷ்டிரம் (598 கிமீ) ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,465 கிமீ பாதையில் ‘கவாச்’ பாதுகாப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 121 ரயில் என்ஜின்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் வழியாக தில்லி - மும்பை, தில்லி - ஹௌரா ஆகிய ரயில் பாதைகளில் சுமாா் 3 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இந்த ‘கவாச்’ பாதுகாப்பு பொறிமுறையை பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 6 ஆயிரம் கி. மீ. ரயில் பாதைகளில் ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பை பொருத்த விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆா்) இந்திய ரயில்வே தயாரித்து வருகிறது.

இவ்வாறு நாட்டில் மொத்தம் 10,465 கிமீ தொலைவுக்கு ‘கவாச்’ பாதுகாப்பு அமைப்பை பொருத்தும் திட்டம் பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்த நிலையில், ‘கவாச்’ உற்பத்தி நிறுவனங்களை அதிகரிக்கவும், இதன் தொழில்நுட்பத் திறனை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அந்தப் பதிலில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.