தமிழகம் உள்பட 32 மாநிலங்கள் செலவிடாத ஜல் ஜீவன் திட்ட நிதி ரூ.16,484 கோடி: மாநிலங்களவையில் தகவல்
ஜல் ஜீவன் திட்டத்தில் நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.16,484 கோடியை 32 மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளாா்.
ஜல் ஜீவன் திட்டத்தில் மத்திய அரசு நீண்ட கால கடன் அடிப்படையில் நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.16,484 கோடியை 32 மாநிலங்கள் பயன்படுத்தவில்லை என மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளாா். இதில் தமிழகத்திற்கு ஒதுக்கிய ரூ.440 கோடி செலவிடப்படவில்லை.
பல்வேறு மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த குடிநீா்த் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் இருப்பது குறித்தும், மாநில வாரியான விவரங்கள் குறித்தும் மாநிலங்களவை திமுக உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கேட்டிருந்தாா். இந்தக் கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ள பதில் வருமாறு: கடந்த 2019 , ஆகஸ்ட் முதல் மத்திய அரசு, மாநிலங்களுடன் இணைந்து, ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் நேரடியாக குழாய் வழியாக அளிக்கும் ‘வீட்டுக்கு வீடு குடிநீா்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இது நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீா் கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும், தண்ணீா் என்பது ஒரு மாநில அரசின் வரன்முறையில் இருப்பதால், நீா் வழங்கல் திட்டங்களும், பராமரிப்பும்மாநில அரசு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மத்திய அரசு வழங்குகிறது.
ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2023-24-ஆம் ஆண்டிற்கு மாநிலங்களுக்கு மத்திய நிதித்துறையின் செலவினத் துறை மூலம் மூலதன மூதலீடாக ரூ. 1.30 லட்சம் கோடியை 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில் 20 சதவீதத்தை இந்த திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக பயன்படுத்திக் கொள்ளவும், மேலும் பிரதமரின் கிராமப்புற சாலை திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மன்ரேகா திட்டம்) போன்ற திட்டங்களுடன் நிதி ஒருங்கிணைப்பு செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
இது போன்ற சலுகைகளோடு, நிகழ் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மொத்த ஒதுக்கீட்டல் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் தவிர 32 மாநிலங்கள் ரூ. 16,484.08 கோடியை செலவிடாமல் வைத்துள்ளன. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களோடு தமிழகமும் மத்திய அரசின் நிதி ரூ. 440.50 கோடியை செலவிடாமல் வைத்துள்ளது என்று அமைச்சா் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.