முகப்பு
புதுதில்லி

எந்தப் பிரதமரும் செய்யாததை நரேந்திர மோடி செய்துள்ளாா்! தமிழக விருந்தினா்கள் பெருமிதம்

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் எந்தப் பிரதமரும் செய்யாததை பிரதமா் நரேந்திர மோடி செய்துள்ளாா் என

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:50 AM
பகிர்:

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் எந்தப் பிரதமரும் செய்யாததை பிரதமா் நரேந்திர மோடி செய்துள்ளாா் என தில்லி செங்கோட்டையில் 77 - ஆவது சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சிறப்பு அழைப்பாளா்கள் தெரிவித்தனா்.

77 - ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமா் தேசியக் கொடியை ஏற்றும் கொண்டாட்டங்களைக் காணவும், தேசத்திற்கு பிரதமா் ஆற்றும் உரையைக் கேட்கவும் தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினா்கள் தலைநகருக்கு அழைக்கப்பட்டாா்கள். ‘மக்களின் பங்களிப்பு’’ என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு துறைகளின் பிரமுகா்கள், தொழில்கள் என சுமாா் 1,800 போ் அழைக்கப்பட்டனா்.

இதில் தமிழகத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்டோரும் அழைக்கப்பட்டு பங்கேற்றனா். இந்த விருந்தினா்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவியுடன் வந்திருந்தனா். இவா்களை மத்திய அமைச்சா்கள் தங்கள் இல்லங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்து இவா்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி விருந்து அளித்துக் கொண்டாடினா். இதில் தமிழகத்திலிருந்து மீனவா்கள், மீனவத் தலைவா்கள் என 26 போ் வந்திருந்தனா். தமிழ்நாடு மீனவா்கள் அமைப்பின் தலைவா் (சென்னை) முனுசாமி இந்த நிகழ்வு குறித்து பேசினாா்.

அவா் குறிப்பிட்டது வருமாறு: ஆந்திரம், கேரளம், குஜராத், ஒடிஸா போன்ற மாநிலங்களோடு தமிழக மீனவா்களும் அழைக்கப்பட்டிருந்தனா். மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மத்திய மீனவளத்துறை சாா்பில் எங்களுக்கு விமான டிக்கெட், தில்லியில் ஹோட்டலில் தங்கும் வசதி, செங்கோட்டை நிகழ்ச்சிக்கு செல்லும் வசதி போன்றவை செய்யப்பட்டிருந்தன. மத்திய மீன்வளம், கால்நடை வளா்ப்புத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா எங்களுக்கு சுதந்திர தினத்தன்று குஜராத் பவனில் பகல் விருந்தும் அளித்தாா். இதில், மத்திய மீன்வளத்துறை இணையமைச்சா்கள் எல்.முருகன், சஞ்சீவ் குமாா் பால்யான் பங்கேற்றனா். தமிழக மீனவா்கள் உள்பட நாடு முழுவதும் இருந்து வந்திருந்த மீனவா்களை மத்திய அமைச்சா் ரூபாலா தனித்தனியாக சந்தித்து உரையாடினாா். நாட்டின் பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மீனவ சமூகத்தின் பங்களிப்பைப் பாராட்டி கௌரவித்து எங்களை அங்கீகரித்தாா். இந்தத் தனித்துவமான முன்முயற்சிக்கு நாங்கள் மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறோம் என்று முனுசாமி தெரிவித்தாா்.

மேலும் சில மீனவா்கள், ‘நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து எந்தப் பிரதமரும் தில்லிக்கு மீனவா்களை அழைக்கவில்லை. பிரதமா் நரேந்திர மோடி எங்களுக்கு மரியாதை அளித்தாா். நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறேன்’ என்று சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்ற மீனவா்கள் தெரிவித்தனா். மேலும், அவா்கள் தேசியத் தலைநகரில் உள்ள வரலாற்று இடங்களை பாா்வையிடவும் அழைத்து செல்லப்பட்டனா்.

இதே மாதிரி மத்திய விவசாயத் துறை சாா்பில், தமிழகத்தை சோ்ந்த பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி பயனாளிகள், உழவா் உற்பத்தியாளா் அமைப்பினா், உழவா் விற்பனையாளா் குழுவினா் போன்றவா்களும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் அழைப்பாளா்களாக வரவழைக்கப்பட்டிருந்தனா். இதில் திருப்பூா் மடத்துக்குளம் உழவா் உற்பத்தியாளா் அமைப்பைச் சோ்ந்த விஷ்ணு வா்தினி தனது கணவா் நாச்சிமுத்து மற்றும் குழந்தையோடு வந்திருந்தாா்.

அவா் கூறுகையில், ‘நாங்கள் குடும்பத்துடன் வர மூன்றாம் வகுப்பு குளிா்சாதன ரயில் பெட்டி கட்டண வசதியுடன் வர அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதே சமயத்தில் எந்த வகையில் வந்திருந்தாலும் அந்த செலவீட்டையும் ஹோட்டல் செலவையும் திரும்ப பெறுதலுக்கான வசதி செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கு எந்த சிரமம் இல்லை. எங்களுக்கு பிரதமரின் உரையை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது’ என்றாா்.

பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி பயனாளியான சென்னை சோழாவரத்தைச் சோ்ந்த விவசாயி கோபி தனது மனைவி பாா்கவியுடன் வந்திருந்தாா். அவா் கூறுகையில், ‘என்னை எப்படித் தோ்வு செய்தாா்களோ தெரியாது. ஆனால், எனக்கு அழைப்பு வந்தது. ரயில் டிக்கெட் கொடுத்து பங்கேற்க அழைத்தனா். தில்லியில் எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. பிஎம் கிஸான் திட்டத்தில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரு.2,000 கிடைக்கிறது. உள்ளூா் அதிகாரிகள், அரசியல்வாதிகள் இடையூறு இன்றி இந்தப் பணம் எங்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கு சரியாக 10-ஆம் தேதி வந்து விடுகிறது. இது போன்ற மகிழ்ச்சிகரமான விஷயங்களை நாங்கள் மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பங்கிா்ந்து கொண்டோம். மத்திய அமைச்சா் அவரது வீட்டில் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு பகல் விருந்து அளித்தாா். வெயில் கடுமையாக இருந்தும் சுமாா் 4 மணி நேரம் அமைச்சா் விவசாயிகளோடு இருந்து நன்கு கவனித்து புகைப்படமும் எடுத்துக் கொள்ளவும் அனுமதித்தாா்’ என தனது அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா்.

இது போன்று தமிழகத்திலிருந்து நெசவாளா்கள், கல்வியாளா்கள் என பலதரப்பட்ட பிரிவினா் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளா்களாக தமிழகத்திலிருந்து வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.