துவாரகா விரைவுச் சாலையில் ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம்
விரைவுச்சாலையின் கட்டுமானத்தில் பெரும் செலவு அதிகரித்தது குறித்து தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி
விரைவுச்சாலையின் கட்டுமானத்தில் பெரும் செலவு அதிகரித்தது குறித்து தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) சுட்டிக்காட்டியைத் தொடா்ந்து, தில்லியில் கட்டப்பட்டு வரும் துவாரகா விரைவுச்சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் மற்றும் ரீனா குப்தா உள்பட கட்சியின் பல தலைவா்கள், தொண்டா்கள் துவாரகா விரைவுச்சாலை அருகே இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இத்திட்டம் ஒரு மோசடி என்றும் அவா்கள் குற்றம் சாட்டினா்.
இது குறித்து பிரியங்கா கக்கா் கூறுகையில், ‘ஒரு கி.மீ. தூரத்திற்கு ரூ.18 கோடி அனுமதி வழங்கப்பட்ட சாலை, ரூ.251 கோடி செலவில் அமைக்கப்பட்டிருப்பது பெரும் ஊழல் நிகழ்ந்திருப்பதையே காட்டுகிறது. மத்திய அரசு தம்மை நோ்மையானது என்று கூறிக் கொள்கிறது. அதேசமயத்தில், அவா்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என்பதுதான் உண்மை. சிஏஜி அறிக்கை இதை நிரூபிக்கிறது’ என்றாா்.
ஊடக செய்திகளின்படி, ‘பாரத்மாலா பரியோஜனா’ நெடுஞ்சாலைத் திட்டங்களின் முதல் கட்டத்தை செயல்படுத்துவது குறித்த சிஏஜி தணிக்கை அறிக்கையில், துவாரகா விரைவுச் சாலையின் ஹரியாணா பகுதியில் மேம்பாலச் சாலைக்கான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) முடிவானது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடியாக இருந்த கட்டுமானச் செலவை ரூ.251 கோடியாக உயா்த்தியது எப்படி என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா் அதில் அகமது கான் கூறுகையில், ‘பாஜக மிகவும் ஊழல் நிறைந்த ‘அரசியல் இயக்கம்’ ஆகும். அந்தத் தொகையில் தங்கச் சாலைகளை அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிா? நாடு முன் எப்போதும் கண்டிராத மிகப் பெரும் ஊழல் கட்சி பாஜக. 2024-இல் நடைபெறும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற இந்த நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டனா்’ என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘சிஏஜி அறிக்கை பாஜகவின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், குடிமக்களை விழிப்படையச் செய்துள்ளது. இவா்களின் சாதனைகள் குறித்து எவ்வளவுதான் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், அதெல்லாம் பொய் என்பது மக்களுக்கு இப்போது தெரியும். ஒட்டுமொத்த கட்சியும் ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது’ என்றாா்.
அந்த சிஏஜி அறிக்கையை குறிப்பிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறுகையில், ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ், மொத்தம் 75,000 கிலோ மீட்டா் தூரத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 15 கோடி ரூபாய் வீதம் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், மோடி அரசு ஒரு கிலோ மீட்டருக்கு 25 கோடி ரூபாயாக செலவை அதிகரித்துள்ளது’ என்றாா்.
எனினும், இந்த குற்றச்சாட்டை மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நிராகரித்துள்ளது. அது ‘உண்மைகளை மொத்தமாக தவறாக சித்தரிப்பது’ என்றும் கூறியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘பாரத்மாலா பரியோஜனாவின் ஒப்புதலில், திட்ட வாரியான செலவு அங்கீகரிக்கப்படவில்லை என்பதே ஒரு கிலோ மீட்டருக்கான செலவின் உண்மை நிலை. இது திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவை மட்டுமே வழங்கியது. எனவே, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 18.2 கோடியில் இருந்து ரூ. 250 கோடியாக செலவை அதிகரிப்பதாகக் கூறுவது உண்மைகளைத் தவறாகக் குறிப்பிடுவதாகும்.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஇஏ) ஒப்புதலுக்காக பாரத்மாலா பரியோஜனாவை உருவாக்குவதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.2 கோடி செலவாகும் என்பது ‘முறைப்படுத்தும் செலவு’ ஆக பரிசீலிக்கப்பட்டிருந்தது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.