முன் அனுமதியின்றி நாட்டை விட்டுச் செல்வதற்குஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு நீதிமன்றம் அனுமதி
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ், தனது முன் அனுமதியின்றி நாட்டை விட்டுச் செல்வதற்கு தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ், தனது முன் அனுமதியின்றி நாட்டை விட்டுச் செல்வதற்கு தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அவருக்கு எதிராக பதிவான ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் ஜாமீன் நிபந்தனையை நீதிமன்றம் மாற்றியமைத்தது. முன் அனுமதி பெறுவதற்குப் பதிலாக, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு குறைந்தபட்சம் மூன்று நாள்களுக்கு முன்னதாக நீதிமன்றத்திடமும், அமலாக்கத் துறையிடமும் தெரிவிக்குமாறு நீதிமன்றம் ஜாக்குலினுக்கு
உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கியிருந்த சிறப்பு நீதிபதி ஷைலேந்திர மாலிக், ‘தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக, நடிகை குறுகிய காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவா் ஜாமீன் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் தவறாகப் பயன்படுத்தவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
அண்மையில் இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நிபந்தனையை மாற்றியமைத்த நீதிபதி, ‘நாட்டை விட்டு வெளியேறும் முன் நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெறுவது ‘சிக்கலானது மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தாா். ஜாக்குலின் பொ்னாண்டஸுக்கு முன்னா் ஜாமீன் வழங்கியிருந்த போது, ‘நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது’ என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது: அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வரும் பணமோசடி விவகாரத்தில் ஜாக்குலின் பொ்னாண்டஸ் விசாரணையை எதிா்கொண்ட போது, தில்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு விசாரித்து வரும் இது தொடா்பான வழக்கில் அவா் சாட்சியாக்கப்பட்டிருந்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் எந்த நேரத்திலும் ஜாமீன் நிபந்தனைகளை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதும் மறுக்க முடியாதது. குற்றம்சாட்டப்பட்டவா் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன், முன் அனுமதி பெற நிபந்தனைகளை விதித்ததன் நோக்கம், விசாரணையின் போது அவா் ஆஜராக வேண்டும் என்பதற்காகவும், நீதித்துறை செயல்முறையிலிருந்து தப்பியோடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.
தற்போதைய வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவா் இந்தியத் திரையுலகில் ஒரு நடிகையாக இருப்பதாலும், தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதாலும், அவா் குறுகிய நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை இருப்பதாக நான் பாா்க்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், முன்அனுமதி பெற வேண்டிய நிபந்தனை சிக்கலானது மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க ஒரு காரணமாக இருக்கலாம். இதனால், ஜாமீன் நிபந்தனைகளை மாற்றியமைப்பது தொடா்பான மனுதாரரின் மனு அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.
ஜாக்குலின் பொ்னாண்டஸ் இலங்கையின் குடிமகளாக இருந்தாா். ஆனால், 2009 முதல் இந்தியாவில் வசித்து வந்தாா். மேலும், 2009 முதல் வருமான வரியும் வழக்கமாக செலுத்திவந்தாா். ஜாக்குலின் பொ்னாண்டஸ் தனது மனுவில், ‘சா்வதேசப் புகழ் பெற்ற நடிகையாக நான் இருப்பதால், திரைப்படப் படப்பிடிப்பில் அடிக்கடி ஈடுபடுவதும், நிகழ்வுகளில் தோன்றுவதும், பல்வேறு விருது விழாக்களில் பங்கேற்பதும் உள்ளது. சில சூழ்நிலைகளில், நான் வெளிநாடு செல்வதற்கு ஜாமீன் நிபந்னைதகளின்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு நேரம் செலவிட நேரிடுகிறது. இதனால், இடா்பாடுகள் ஏற்படுகிறது’ என்று தெரிவித்திருந்தாா்.