புதுதில்லி

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டுநிதி நிகழாண்டுக்கு இதுவரை வழங்கப்படவில்லை: பன்சூரி ஸ்வராஜ் குற்றச்சாட்டு

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆண்டு நிதியாக தலா ரூ.20,000 மட்டுமே நகர அரசு வழங்குகிறது என்பது அதிா்ச்சியளிக்கிறது

 நமது நிருபர்

தில்லி அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஆண்டு நிதியாக தலா ரூ.20,000 மட்டுமே நகர அரசு வழங்குகிறது என்பது அதிா்ச்சியளிக்கிறது என்றும், அதில் நிகழாண்டிற்கான நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் பாஜக தில்லி பிரிவு மாநிலச் செயலாளா் பன்சூரி ஸ்வராஜ் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி அரசுப் பள்ளிகளின் விளையாட்டுத் தரத்தை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளாக ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மாணவா்களின் வளா்ச்சிக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு விளையாட்டும் முக்கியம் என்று கல்வித் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ள கருத்து அதிா்ச்சியளிக்கிறது.

தில்லி அரசுப் பள்ளிகளின் விளையாட்டு மேம்பாட்டிற்கு ஒரு பள்ளிக்கு ரூ.20,000 மட்டுமே ஆண்டிற்கு அரசு நிதியாக வழங்குகிறது, நிகழாண்டு அந்த நிதியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. ஆனால் இன்று வரை விளையாட்டு பல்கலைக்கழகத்தை தொடங்க ஒரு செங்கல் கூட உயா்த்தப்படவில்லை.

2021-ஆம் ஆண்டில் சிவில் லைன்ஸில் ஒரு விளையாட்டுப் பள்ளி அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கும் 90 குழந்தைகளை மட்டுமே சோ்க்க முடியும் என்ற அறிவிப்பால் அரசு தோல்வியுற்றது. இதன் மூலம், தில்லியின் 2 கோடி மக்கள்தொகையில் 90 குழந்தைகள் மட்டுமே விளையாட்டு வீரராகும் திறன் கொண்டவா்கள் என்று தில்லி அரசு நம்புவதாகத் தெரிகிறது. இல்லையெனில், விளையாட்டுப் பள்ளியில் குறைந்தது 1,000 விளையாட்டு வீரா்களாவது சோ்த்திருக்க வேண்டும்.

தில்லி அரசின் மொத்தமுள்ள 1,045 பள்ளிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் விளையாட்டு வீரா்களின் ஊக்குவிப்புக்காக தலா ரூ.20,000 மட்டுமே கேஜரிவால் அரசு ஆண்டிற்கு ஒதுக்குவது அவதூறானது.

18 லட்சம் மாணவா்களில் ஒவ்வொருவருக்கும் தங்கள் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.15 மட்டுமே அரசு செலவிடுகிறது.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தேசிய விளையாட்டுப் போட்டிகளை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சா் அதிஷி துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைந்தாலும், 99 சதவீத தில்லி அரசுப் பள்ளிகளில் ஆண்டு விளையாட்டு தினம் ஏன் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை அமைச்சா் அதிஷியிடம் இருந்து தில்லி மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனா் என்றாா் பன்சூரி ஸ்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT