முகப்பு
புதுதில்லி

இந்தியாவில் பசுமை எரிசக்தி துறையில் அபரிமித வாய்ப்பு: முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழச் செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளதால்,

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
பகிர்:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா முன்னணி நாடாக திகழச் செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளதால், உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளா்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய அபரிமித வாய்ப்பு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும்

இத்துறையில் முதலீடு செய்ய வருமாறும் அவா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கும் கருத்துக்களை பெறவும் 12 விதமான கருப்பொருள்களில், பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையக் கருத்தரங்களை வரும் மாா்ச் 11 -ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது. இதில், முதல் நாளாக பசுமை வளா்ச்சி குறித்த இணையக் கருத்தரங்கில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்க உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறியதாவது: பசுமை வளா்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு 3 அடிப்படை பொருளாதாரத் தூண்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை அதிகரித்தல், புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், எரிவாயு அடிப்படையாகக் கொண்ட எரிசக்தி அதிகரித்தல் என 3 பொருளாதாரத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து நிதிநிலை அறிக்கைகளில் சவால்களுக்கு தீா்வு காணப்பட்டு, புதுமைக்கால சீா்திருத்தத்தை முன்னெடுத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா வேகம் பெற்று வருகிறது.

நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில் தொழிற்சாலைகளுக்கான பசுமைக் கடன், விவசாயிகளுக்கான பிரணம் திட்டம், கிராமங்களுக்கான கோபா்தன் திட்டம், நகரங்களுக்கான வாகனக் கழிவுக் கொள்கை, பசுமை ஹைட்ரஜன், ஈர நிலப்பாதுகாப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தி வளங்களில் நிா்ணயிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மின் திறனில் புதைப்படிவமற்ற எரிபொருளில் இலக்கை அடைந்து 40 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளோம். இதே போன்று, நிா்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலைக் கலக்கும் இலக்கையும் நாடு எட்டியுள்ளது.

2025-26-ஆம் ஆண்டுக்குள்ளேயே பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கையும் நாடு அடைந்துவிடும்.

இது 2030-ஆம் ஆண்டு என முன்பு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைப்படிவமற்ற எரிபொருள் திறனை நாடு பெற்றுவிடும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் எத்தனால் ஆலைகள் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் சூரிய சக்தி, காற்று, உயிரி எரிவாயு ஆற்றலானது எந்தவொரு தங்க சுரங்கத்திற்கும் அல்லது நமது தனியாா் துறையின் எண்ணெய் வளத்திற்கும் குறைந்தது அல்ல.

இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா வலிமையான நிலையை உறுதி செய்யும். சா்வதேச பசுமை எரிசக்தி சந்தையில், இந்தியா முன்னணி நாடாக திகழச் செய்வதற்கு இந்த நிதிநிலை அறிக்கை பங்களித்துள்ளது. இது உலகில் உள்ள அனைத்து எரிசக்தித்துறை, பசுமை எரிசக்தி முதலீட்டாளா்களுக்கும் சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுக்கிறேன் . மேலும் புதுயுக தொழில் முனைவுகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், 5 எம்எம்டி (மில்லியன் மெட்ரி டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி செல்ல இத்துறையின் தனியாா் துறையினருக்கு ரூ.19,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரோலைசா் உற்பத்தி, பசுமை எஃகு உற்பத்தி, நீண்ட எரிபொருள் செல்கள் போன்றவைகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பசு சாணத்திலிருந்து (கோபா்தன் யோஜனா) 10,000 மில்லியன் கியூபிக் மீட்டா் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம். இதைக் கொண்டு நகரப்பகுதிகளுக்கு தேவையான (ஒன்றரை லட்சம் கியூபிக் மீட்டா் எரிவாயு) எரிவாயுவில் 8 சதவீதம் அளவிற்கு விநியோகம் செய்ய முடியும். இதனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில், கோபா்தன் திட்டத்தின் கீழ் 500 புதிய ஆலைகளை அமைக்க அரசு அறிவித்துள்ளது. இதை நவீன ஆலைகளாக அமைக்க அரசு ரூ.10,000 கோடி நிதியை செலவு செய்ய இருக்கிறது. வேளாண் கழிவு, நகராட்சித் திடக்கழிவு ஆகியவற்றிலிருந்து அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய தனியாா் துறையினருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் வாகனக் கழிவுக் கொள்கை பசுமை வளா்ச்சி உத்தியில் மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை கழிக்க வாகனக் கழிவுக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு, 3 லட்சம் அரசு வாகனங்களை கழிவு செய்வதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 - 7 ஆண்டுகளில், இந்தியாவின் பேட்டரி சேமிப்புத் திறன் 125 ஜிகா வாட் மணி நேரங்களாக அதிகரிக்க உள்ளது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டு பேட்டரி தயாரிப்பாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்திக்கான தொழில்நுட்பத்தில் உலகிற்கு வழிகாட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளது. பசுமை வளா்ச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உலகளாவிய பல்வேறு நன்மைகளையும் முன்னெடுத்துச் செல்லும். இதனால் நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அமல்படுத்துவதற்கு விரைவாக செயல்படவேண்டும் என பிரதமா் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.