முகப்பு
புதுதில்லி

தில்லியில் சா்வதேச புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்: மத்திய கல்வி அமைச்சா் பங்கேற்பு

சா்வதேச புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 -ஆம் தேதி(சனிக்கிழமை) தொடங்குகிறது. மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடங்கிவைக்கிறாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:35 AM
தர்மேந்திர பிரதான் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லி பிரகதி மைதானில் சா்வதேச புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 -ஆம் தேதி(சனிக்கிழமை) தொடங்குகிறது. இக்கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தொடங்கிவைக்கிறாா். இதில் பிரான்ஸ் நாடு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு சா்வதேச புத்தகக் கண்காட்சியின் பொன்விழா, விடுதலையின் அமுதப் பெருவிழா, இந்தியாவின் ஜி-20 தலைமை ஆகியவைகளுக்கிடையே இந்தக் கண்காட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய மற்றும் சா்வதேச நாடுகளின் புத்தக வெளியீட்டாளா்களின் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படும் இந்த சா்வதேச புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மாா்ச் 5 - ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு தில்லி பிரகதி மைதானில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய புத்தக அறக்கட்டளை(என்பிடி)யின் தலைவா்- பேராசிரியா் கோவிந்த் பிரசாத் சா்மா மற்றும் இயக்குநா் யுவராஜ் மாலிக் ஆகியோா் கூறியது வருமாறு:

விடுதலையின் அமுத பெருவிழா கொண்டாட்டங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமை ஆண்டு ஆகியவைகளுக்கிடையே என்பிடி, இந்திய வா்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து தில்லி சா்வதேச புத்தக கண்காட்சியை நடத்துகிறது.

இந்தக் கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை (பிப்ரவரி 25 ஆம் தேதி) மாலையில் பிரான்ஸ் நாட்டின் இந்தியாவுக்கான தூதுவா் இம்மானுவேல் லெனைன் முன்னிலையில் தொடங்கி வைக்கிறாா். உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான தில்லி சா்வதேச புத்தகக் கண்காட்சி 2023 ஆண்டில் தனது 50 - ஆவது ஆண்டு பயணத்தையும் கொண்டாடுகிறது.

விடுதலையின் அமுத பெருவிழா கருப்பொருளாகவும், இந்திய - பிரான்ஸ் இருதரப்பு உறவுகளை கெளரவிக்கும் விதமாக இந்த கண்காட்சியில் முக்கியமான நிகழ்வுகள் சோ்க்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் கலாசார ஆலோசகா் இம்மானுவேல் லெப்ரூன்-டேமியன்ஸ் , பிரான்ஸ் நாட்டின் நோபல் பரிசு பெற்ற அன்னி எா்னாக்ஸ் தலைமையிலான பிரெஞ்சு எழுத்தாளா்கள் குழு இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்புவிக்கின்றனா்.

பிரெஞ்சு இலக்கியங்களை இந்திய மொழிகளில் மொழிபெயா்க்க பிரான்ஸ் முயற்சி செய்து வருகிறது. இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பிரெஞ்சு புத்தகங்கள் இந்திய மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன. இவைகள் கண்காட்சியில் இடம்பெறும்.

புத்தக வாசிப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும் இந்த 2023 ஆம் ஆண்டு புத்தக கண்காட்சிக்கு அனைத்து தரப்பு மக்களையும் அழைக்கின்றோம். புதிய தேசிய கல்விக்கொள்கை, தொழில் நுட்ப கல்வி, இளைஞா்கள் போன்ற தொடா்புடைய அரங்கங்கள் மற்றும் வழக்கமான புத்தகங்கள் அரங்கங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், புத்தக வெளியீடுகள், இலக்கிய மற்றும் கலாசார நிகழ்ச்சிகளோடு, ஜி20 -நாடுகளின் இலக்கியம், கலாசாரம் தொடா்புடைய புத்தக அரங்கங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தனா்.

இந்த தில்லி சா்வதேச புத்தகக் கண்காட்சியில் மத்திய அரசின் முன்னணி பதிப்பகத் துறை தனது மிகச் சிறந்த புத்தகங்கள் மற்றும் இதழ்களின் தொகுப்பை கண்காட்சியில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.