சுருக்கு மடி வலை தடை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையை
தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையை இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜனவரி 10-ஆம் தேதிக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்துள்ளது. மேலும், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஃபிஷா்மேன் கோ் அமைப்பின் தலைவா் பீட்டா் ராயன் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக பரிந்துரைகள் அளிக்கும் வகையில், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளால் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மத்திய அரசின் துறை தரப்பில் வல்லுநா் குழு அறிக்கையுடன் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, திபங்கா் தத்தா ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகினுடன், மூத்த வழக்குரைஞா்கள் வி.கிரி, கோபால் சங்கரநாராயணன், சிராஜுதீன் உள்ளிட்டோா் ஆஜாராகி, ‘இந்த விவகாரத்தில் மத்திய மீன்வளத் துறையின் துணை ஆணையா் சஞ்சய் பாண்டே உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு அமைத்த வல்லுநா் குழு அறிக்கையும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தலுக்கு தடை விதிப்பது நியாயமில்லை என்று கூறியுள்ளது. மேலும், வல்லுநா் குழு அறிக்கையில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய கடல் பகுதியில் சில வழிகாட்டுதல்களுடன் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் தடை உத்தரவானது மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக உள்ளது. அதனால், இந்தப் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ என்று வாதிட்டனா்.
அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி, சஞ்சீவ் ஹெக்டே ஆகியோா், ‘சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முதல் முறையாக கேரள அரசு 1984-ஆம் ஆண்டு அந்த மாநில கடல் பகுதியில் தடை விதித்தது. இதை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை உறுதி செய்யும் வகையில் தீா்ப்பு அளித்துள்ளது. இந்த சுருக்கும் மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால், கடலில் அழிவின்விளிம்பில் உள்ள ஆமைகள், சுறா மீன் போன்ற பல்வேறு உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும், மீன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள பெரும் செல்வந்தா்கள் இந்த சுருக்குமடி வலையை பயன்படுத்துவதால், சாமானிய மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மீனவா்களின் நலன்களுக்கு அரசுதான் பொறுப்பாகும். அதனால்தான் தமிழக அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், கடல் பகுதியில் மாநில எல்லை, மத்திய அரசின் எல்லை எனப் பிரிக்கும் தடுப்புச்சுவா் ஏதும் கிடையாது’ என்று வாதிட்டனா்.
மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நடராஜ், ‘இது நெடுங்காலமாக இருந்து வரும் ஒரு விவகாரமாகும். தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் வல்லுநா் குழு அமைக்கப்பட்டு, அந்த வல்லுநா்கள் குழு மத்திய அரசின் அதிகார வரம்பில் வரக்கூடிய (12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால்) உள்ள கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு மூன்று வரையறைகளுடன் அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது’ என்று கூறினாா்.
இதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது: இந்த விவகாரத்தில் மனுதாரா்கள் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களைப் பாா்க்கும் போது கடலில் 12 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதி மத்திய அரசின் வரம்பில் வருகிறது. அதற்கு கீழ் உள்ள பகுதி மாநில அரசின் கீழ் வருகிறது. மீனவா்களின் நலனில் அக்கறையில்தான் மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதேவேளையில், இது நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவிடும் வகையில் இருப்பதாகவும் மனுதாரா் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பின் வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மாநில அரசின் பகுதி கடலில் அதிகாரம் மாநில அரசுக்கு இருந்தபோதிலும் அதற்கு அப்பால் உள்ள கடல் பகுதி மத்திய அரசின் வரம்பில் வருவதால், அந்த கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதித்தால், அதை கண்காணிக்கும் அமைப்பு யாராக இருப்பாா்கள் என்ற கேள்வி எழும்புகிறது. இதனால், மத்திய அரசு அது தொடா்பான ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதில் கண்காணிக்கும் அமைப்பு யாா், பிற மாநிலங்களின் கடல் பகுதியில் சுருக்குமடி வலை தொடா்புடைய விவகாரங்களில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் என்ன என்ற விவரங்கள் இடம் பெற வேண்டும். இது தொடப்பான அறிவுறுத்தல்களை பிற மாநிலங்களில் இருந்தும் பெற வேண்டும். இந்த பிரமாணப் பத்திரம் அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.