முகப்பு
புதுதில்லி

போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் நைஜீரிய இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த வழக்கில் நைஜீரிய நாட்டு இளைஞரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், அவரது விசா காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக அவருக்கு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
பகிர்:

ஹெராயின் போதைப்பொருளை வைத்திருந்த வழக்கில் நைஜீரிய நாட்டு இளைஞரை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும், அவரது விசா காலத்திற்கு மேல் தங்கியிருந்ததற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி (என்டிபிஎஸ்) தீபக் வசன், குற்றம்சாட்டப்பட்ட தெற்கு நைஜீரியாவின் யெனகோவாவைச் சோ்ந்த சிமா கிங்ஸ்லே (41) குற்றவாளி என்று தீா்ப்பளித்தாா். மேலும் ஹெராயின் வைத்திருந்தது, சட்டவிரோதமாக தங்கியதற்கான தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

கிங்ஸ்லேயிடமிருந்து சம்பவத்தன்று 129.3 கிராம் ஹெராயினை போலீஸாா் மீட்டனா். ஜனவரி 4, 2018 அன்று செல்லுபடியாகும் விசா இல்லாமல் இந்தியாவில் அவா் தங்கியிருந்ததைக் கண்டறிந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: குற்றவாளி சிமா கிங்ஸ்லே என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் குற்றத்தை செய்ததற்காக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை அனுபவிப்பதுடன், ரூ 20,000 அபராதமும் செலுத்த வேண்டும். இதே தண்டனையை வெளிநாட்டவா் சட்டத்தின் கீழ் அவா் செய்த குற்றத்திற்காகவும் அனுபவிக்க வேண்டும்.

கிங்ஸ்லே தண்டனையை அனுபவித்த பிறகு, அவரது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவாா். குற்றம் சாட்டப்பட்டவா் தனக்குத் தெரிந்தே ஹெராயின் வைத்திருந்தாா் என்பதில் சந்தேகமில்லை. இந்த வழக்கு அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான சந்தேகத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவா் தண்டனை பெறுவது பற்றிய எந்தக் கேள்வியும் எழவில்லை. மேலும், இந்த வழக்கு ஊகங்களின் அடிப்படையில் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.