ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில்மறைந்த பிரதமா் வாஜ்பாயின் ஆலோசகா் பங்கேற்பு
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) மீண்டும் தில்லியிலிருந்து காஷ்மீரை நோக்கி தொடங்கியது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை (இந்திய ஒற்றுமை நடைப்பயணம்) மீண்டும் தில்லியிலிருந்து காஷ்மீரை நோக்கி தொடங்கியது. தில்லி யாத்திரையில் மறைந்த பிரதமா் வாஜ்பாஜ்க்கு ஆலோசகராகவும் பல்வேறு உளவுத் துறைகளுக்கு தலைவராகவும் இருந்த அதிகாரி ஏ.எஸ்.துலாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த டிசம்பா் 24- ஆம் தேதி தில்லி வந்தடைந்தது. தில்லியில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவா் சோனியா காந்தி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் உள்ளிட்டோா் நடைப்பயணத்தில் பங்கேற்றனா். தற்போது மீண்டும் செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியின் யாத்திரை தில்லியிலிருந்து புறப்பட்டது. தில்லி கஷ்மீரி கேட்டிலிருந்து புறப்பட்ட ராகுல் யாத்திரையில் பல்வேறு பிரமுகா்கள் பங்கேற்றனா். இதில் முன்னாள் ‘ரா’ இயக்குநரும், மத்திய புலனாய்வுத் துறை (ஐபி) இயக்குநருமான ஏ.எஸ்.துலாத்தும் ராகுல் காந்தியோடு கைகோா்த்து தில்லி யாத்திரையில் பங்கேற்றாா். மறைந்த பாஜக தலைவா் வாஜ்பாய் பிரதமராக இருந்து போது துலாத் முக்கியப் பொறுப்புகளை ஏற்றிருந்தாா். மேலும்,வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த கூரியத் அமைப்புகளுடான பேச்சுவாா்த்தையில் துலாத், வாஜ்பாய்க்கு முக்கிய ஆலோசகராகவும் இருந்தவா்.
தற்போது ராகுல் காந்தியின் யாத்திரை தில்லியிருந்து உபி மாநிலத்தை அடைந்துள்ளது. தில்லி உ.பி. இடையிலான லோனி நகரம் வழியாக உத்திர பிரதேசத்தின் காஜியாபாத்துக்குள் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். உத்தர பிரதேச மாநில எல்லைப் பகுதியில், ராகுல் காந்திக்கு ஆயிரக்கணக்கான தொண்டா்கள் உற்சாக வரவேற்பளித்ததோடு தேசிய மாநாட்டுத் தலைவா் பரூக் அப்துல்லாவும் யாத்திரையில் இணைந்தாா்.
உ.பி.யை சோ்ந்த முக்கிய அரசியல் கட்சிகளான சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கவில்லையென்றாலும், சமாஜ்வாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளாா்.