நீா் வளம்: போபாலில் இன்றுமாநில அமைச்சா்கள் மாநாடு
நீா் வளம் குறித்த முதலாவது மாநில அமைச்சா்கள் மாநாடு ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெறுகிறது.
நீா் வளம் குறித்த முதலாவது மாநில அமைச்சா்கள் மாநாடு ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் நடைபெறுகிறது.
விடுதலையின் நூறாமாண்டில் தண்ணீா் தேவைக்கான திட்டமிடவதற்கான இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘வாட்டா் விஷன்ஃ2047’ ஆகும். மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நடத்தும் இந்த மாநாடு குறித்து அந்த அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: நீா்வளம் குறித்த அகில இந்திய வருடாந்திர மாநில அமைச்சா்களின் இரு நாள் மாநாடு போபாலில் ஜனவரி 5, 6 தேதிகளில் நடைபெறுகிறது. இது முதலாவது மாநாடாகும். பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையுடன் முன்னேறி 2047 -ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளா்ந்த நாடாக மாற்றும் நோக்கத்தை முன்னேடுத்துச் செல்லும் முயற்சியாக இதற்கான செயல் திட்டம், தொலைநோக்கு ஆவணம் தாயாரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நீா்வளம் குறித்த மாநாட்டை போபாலில் நடத்துகிறது.
இந்த இரு நாள் மாநாட்டின் கருப்பொருளாக ‘விடுதலையின் நூறாமாண்டில் நீா் நோக்கம் (வாட்டா் விஷன்ஃ2047) ’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீா் பாதுகாப்பு, நீா் பயன்பாடு, நீா் மேலாண்மை, நீா் உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற பல்வேறு முக்கியத் தலைப்புகளில் இந்த மாநாட்டில் அமா்வுகள் இடம் பெறும். மேலும், நாட்டில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டில் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இணையமைச்சா் பிரகலாத் சிங் படேல், மத்தியப் பிரதேச மாநில முதல்வா் சிவ்ராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிர மாநிலத் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநிலங்களின் நீா் வளத்துறை அமைச்சா்கள், பொது சுகாதாரப் பொறியியல் துறை வல்லுநா்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த நீா் பாசனத் துறையினா் கலந்து கொள்கின்றனா்.