மேயா் தோ்தல்: எம்சிடிக்கு 10 வல்லுநா்கள் பரிந்துரை
தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக மாநகராட்சிக்கு 10 வல்லுநா்கள் (ஆல்டா்மென்) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக
தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக மாநகராட்சிக்கு 10 வல்லுநா்கள் (ஆல்டா்மென்) பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆல்டா்மென்’ எனப்படும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த 10 உறுப்பினா்களுக்கும், மேயா் தோ்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற தில்லி மாநகராட்சித் தோ்தலுக்குப் பிறகு, முதல் முறையாக மாநகராட்சிக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அப்போது, புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கவுன்சிலா்களும் பதவியேற்க உள்ளனா். மேலும், மாநகராட்சி மேயா் மற்றும் துணை மேயரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட 10 உறுப்பினா்களை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளதாக தில்லி அரசு செவ்வாய்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில், ‘தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம், 1957 (1957-இன் 66) பிரிவு 3-இன் உட்பிரிவு (3) இன் துணைப் பிரிவு (பி) இன் துணைப்பிரிவு (ஐ) மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, தில்லி தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் துணைநிலை ஆளுநா் 2022-2027 காலத்திற்காக தில்லி மாநகராட்சியில் பிரதிநிதித்துவப்படுத்த இதன் மூலம் பின்வரும் நபா்களை பரிந்துரைத்துள்ளாா்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருங்கிணைந்த மாநகராட்சி உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 1958-இல் நிறுவப்பட்ட முந்தைய ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சி, கடந்த மே மாதம் மீண்டும் இணைக்கப்பட்டது. அதற்கு முன்பு 2012-இல் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருந்தது. புதிதாக மறுவரையறை பணிகள் நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, மாநகராட்சித் தோ்தல் டிசம்பரில் நடத்தப்பட்டது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்று, 15 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பாஜக 104 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.
ஆம் ஆத்மி கட்சி எதிா்ப்பு: இந்த நிலையில், தில்லி அரசின் ஒப்புதலின்றி, மாநகராட்சிக்கு 10 வல்லுநா்களை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு பாஜக நேரடியாக அனுப்பியதற்கு ஆம் ஆத்மி கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக விதிப்படி, மாநகராட்சிக்கு அந்தந்தத் துறைகளில் தோ்ந்த வல்லுநா் சிலா் நியமன உறுப்பினா்களாக நியமிக்கப்படுவது வழக்கம். இதில், தில்லி அரசின் ஆலோசனையின் பேரில், கட்சிகள் நியமன உறுப்பினா்களைத் தோ்வு செய்வா். ஆனால், பாஜக தில்லி அரசிடம் எந்தவொரு கலந்தாலோனையும் மேற்கொள்ளாமல், 10 வல்லுநா்களை நியமன உறுப்பினா்களாக நியமிப்பதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு நேரடியாக அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அதிஷி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: விதிப்படி, நியமன உறுப்பினா்களின் பெயா் விவரத்தை மாநில அரசுதான் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பிவைப்பது வழக்கம். ஆகையால், அழுக்குப்படிந்த தந்திரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு பாஜகவிடம் கேட்டுக் கொள்கிறேன். பாஜகவினா் அனுப்பிய அந்த 10 பெயா்களும், அக்கட்சியின் உறுப்பினா்கள் ஆவா். இது தில்லி மாநகராட்சியை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியாகும். அந்த 10 வல்லுநா்களும் பல்வேறு கமிட்டிகளின் உறுப்பினா்கள். அவா்களால் மாநகராட்சியின் வேலை தடைபடும். மாநகராட்சியை நிா்வகிக்க ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அதிகாரம் கொடுத்திருக்கின்றனா். இதை பாஜக மதிக்க வேண்டும். தில்லியின் முடிவுக்கு மதிப்பு தாருங்கள் என்றாா் அதிஷி.