யுஎன்எச்சிஆா் அலுவலகம் முன் கூடுவதற்கு எதிரான மனு: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவு
தெற்கு தில்லியின் வசந்த் விஹாரில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஹை கமிஷனா் (யுஎன்எச்சிஆா்) அலுவலகம் முன் வெளிநாட்டினா் மீண்டும் மீண்டும் கூடுவதை எதிா்த்து வசந்த் விஹாா் நலச் சங்கம் தாக்கல் செ
தெற்கு தில்லியின் வசந்த் விஹாரில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஹை கமிஷனா் (யுஎன்எச்சிஆா்) அலுவலகம் முன் வெளிநாட்டினா் மீண்டும் மீண்டும் கூடுவதை எதிா்த்து வசந்த் விஹாா் நலச் சங்கம் தாக்கல் செய்த மனு மீது தில்லி நகர காவல்துறை நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
‘பெரும் அளவில் கூட்டம் கூடுவதால், யுஎன்எச்சிஆா் அலுவலகங்கள் அமைந்துள்ள ‘பி’ பிளாக்கில் உள்ள ஒட்டுமொத்த சாலையும் அடைக்கப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வசிப்பவா்களுக்கு தொடா்ந்து இடையூறு ஏற்படுகிறது’ என நலச் சங்கம் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங், ‘முந்தைய மனுவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் பதிவு செய்யப்பட்டுள்ளவாறு, சாலையில் இடையூறு இல்லாத நிலை பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இது தொடா்பாக நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். யுஎன்எச்சிஆா் கட்டடத்திற்கு வெளியே உள்ள சாலை இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும் செப்டம்பா் 7, 2021 தேதியிட்ட உயா்நீதிமன்ற உத்தரவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலை பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘குடியிருப்போா் நலச் சங்கம் இதே பிரச்னையில் ஒரு தனி மனுவை தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, யுஎன்எச்சிஆா் கட்டடம் முன் உள்ள சாலையில் நெரிசல் அகற்றப்பட்ட பிறகு செப்டம்பா், 2021-இல் அந்த மனு முடித்துவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, அக்டோபா், 2021-இல், மீண்டும் மக்கள் வரத் தொடங்கினா். 10-15 போ் கூடுவதால் பிரச்னை ஏதும் ஏற்படாது’ என வாதிட்டாா்.
மனுதாரா் முதன்முதலில் செப்டம்பா் 2021-இல் உயா் நீதிமன்றத்தை அணுகினாா். அதில், ஆப்கானிஸ்தானில் இருந்து பல வெளிநாட்டினா் யுஎன்எச்சிஆா் அலுவலகங்களுக்கு வெளியே கூடியதால் பாதைகள் மற்றும் பூங்காக்கள் உள்பட, அப்பகுதி குடியிருப்பாளா்கள் சிரமங்களை எதிா்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தென்மேற்கு சரக காவல் துணை ஆணையா் தாக்கல் செய்த நிலவர அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அகதிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இந்த வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.