கஞ்சாவாலா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட ஆஷுதோஷின்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
கஞ்சாவாலா பகுதியில் காரின் அடியில் சிக்கி 20 வயது இளம்பெண் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷுதோஷ் பரத்வாஜின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை
கஞ்சாவாலா பகுதியில் காரின் அடியில் சிக்கி 20 வயது இளம்பெண் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷுதோஷ் பரத்வாஜின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மனு மீதான விசாரணை பெருநகர மாஜிஸ்திரேட் சன்யா தலால் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி விடுப்பில் இருந்ததால் விசாரணை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
பரத்வாஜின் வழக்குரைஞா் இது தொடா்பாக திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ஆஷுதோஷ் தொடா்புடைய குற்றம், பிணையில் விடுவிக்கப்படக்கூடியது என்றும், அவா் இச்சம்பவத்திற்குப் பிறகு போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளாா். இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), கிரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகியோரை போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா்.
அதன் பிறகு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அஷுதோஷிடம் போலீஸாா் விசாரித்தனா். மேலும் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் அவா் வைக்கப்பட்டாா். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான அங்குஷ் கன்னா வெள்ளிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தாா், அவருக்கு சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. 20 வயதான அஞ்சலி சிங், புத்தாண்டு அதிகாலையில் சுல்தான்புரியில் இருந்து கஞ்சாவாலா வரை 12 கி.மீ. தூரம் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.