‘கரோனரி ஸ்டென்ட்’ விற்பனை விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
போதிய ஆதரவளிக்கும் மருத்துவ ஆய்வுகளைச் சமா்ப்பித்த பிறகே நாட்டில் கரோனரி ஸ்டென்ட்களை விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தப்படுத்தவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று
போதிய ஆதரவளிக்கும் மருத்துவ ஆய்வுகளைச் சமா்ப்பித்த பிறகே நாட்டில் கரோனரி ஸ்டென்ட்களை விற்பனை செய்யவும், சந்தைப்படுத்தப்படுத்தவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா் மயங்க் ஷிா்சாகா் தாக்கல் செய்த மனு, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் - வழக்குரைஞா் ஷிா்சாகருடன் வழக்குரைஞா் ஆா். ஜவஹா்லால் ஆஜரானாா். அப்போது, பொது நல மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையத்துக்கும் (என்பிபிஏ) நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது. மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா ஆஜராகினாா்.
முன்னதாக, வழக்குரைஞா் துஷாா் சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தற்போது, மருத்துவ ஆய்வை ஆதரிக்கும் வழிமுறைகள் இன்றியும், அலட்சியத்துடனும் காா்டியாக் ஸ்டென்ட்கள் தயாரிக்கவும், இறக்குமதி செய்யவும் மற்றும் விற்கவும் அனுமதிக்கப்படுகின்றன. பொது சுகாதார நலன் கருதி, அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (எஃப்டிஏ) இருப்பது போல, இந்த சாதனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான ஒரு வலுவான வழிமுறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மேலும், காா்டியாக் ஸ்டென்ட்கள், கரோனரி ஸ்டென்ட்களின் உற்பத்தியாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்கள் இந்தியாவில் அவற்றை சந்தைப்படுத்தல்-விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன், அவற்றுக்கான மருத்துவ ஆய்வு மற்றும் தரவு, விசாரணை ஆகியவற்றை ஆதரிக்கும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
உலகளவில் 2019-ஆம் ஆண்டில் இதய நோய்களால் 1.79 கோடி போ் இறந்துள்ளனா். அவா்களில் 1.52 கோடி போ் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறந்தனா். இந்தியா போன்ற குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் தொற்று இல்லாத நோய்களில் இடம்பெற்றுள்ள இதய வாஸ்குலா் நோய் (சிவிடி) மொத்த நோய்ச் சுமையில் 50 சதவீதம் பங்களிப்பு இருக்கும் என்றும், இது 2030-க்குள் இதய வாஸ்குலா் நோயால் மட்டும் 2.33 கோடி மனித இறப்புக்கு வித்திடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயிரைக் காப்பாற்ற உரிய ‘ட்ரக்-எலுட்டிங் ஸ்டென்ட்கள் (டிஇஎஸ்)’ போதுமான அளவு கிடைப்பது அவசியமாகிறது.
தற்போது காா்டியாக் ஸ்டென்ட்கள், கரோனரி ஸ்டென்ட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படுகின்றன. மிகக் குறைவான துணை மருத்துவ ஆய்வு மற்றும் தரவு இல்லாமல் உற்பத்தியாளா் மற்றும் இறக்குமதியாளா் மூலம் சமா்ப்பிக்கப்பட்ட முன்கணிப்பு (டிவைஸ்/லிடிரேச்சா்) அடிப்படையில் மட்டுமே இவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய இருதய ஸ்டென்ட்கள், கரோனரி ஸ்டென்ட்களுக்கு ஒப்புதல் அளிக்க, மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பரிசீலனைக்கு சமா்ப்பிக்க வேண்டிய மருத்துவ விவரம் வரையறுக்கப்பட்ட மருத்துவ ஆய்வுத் தரவுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். இதன் காரணமாக அதிக எண்ணிக்கையில் குறைந்த, தரமற்ற காா்டியாக் ஸ்டென்ட்கள், கரோனரி ஸ்டென்ட்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இது இந்திய நோயாளிகளுக்கு பெரும் உடல்நல அபாயத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
கரோனரி ஸ்டென்ட்களின் விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்வதை மனுதாரா் எதிா்க்கவில்லை என்றாலும், சாமானிய மனிதா்கள் மற்றும் நோயாளிகளுக்கு மேம்பட்ட டிரக்-எலுட்டிங் ஸ்டென்ட் கிடைப்பதை உறுதிசெய்ய உச்சவரம்பு விலையை நிா்ணயம் செய்வதற்கான அறிவுசாா் முறையை உருவாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 21-ஆவது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையானது அனைத்து நியாயமான சுகாதார வசதிகளுக்கான உரிமையையும் உள்ளடக்கியதாகும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மே மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.