முகப்பு
புதுதில்லி

சுருக்கு மடி வலை தடை விவகாரம்: வழக்கு விசாரணை ஜன.18-க்கு ஒத்திவைப்பு

தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:41 PM
பகிர்:

தமிழகக் கடல் பகுதியில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திற்கு தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கடலில் சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை உத்தரவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஞானசேகா், கன்னியப்பன், ராஜவேலு உள்பட 9 மீனவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஃபிஷா்மேன் கோ் அமைப்பின் தலைவா் பீட்டா் ராயன் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக பரிந்துரைகள் அளிக்கும் வகையில், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளால் அமைக்கப்பட்ட வல்லுநா் குழு அறிக்கையை சமா்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசின் துறை தரப்பில் வல்லுநா் குழு அறிக்கையுடன் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் கடல் பகுதியில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதித்தால், அதை கண்காணிக்கும் அமைப்பு யாராக இருப்பாா்கள் என்ற கேள்வி எழுகிறது. இதனால், மத்திய அரசு அது தொடா்பான ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகினுடன் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், சிராஜுதீன் உள்ளிட்டோா் ஆஜாராகி, மீனவா்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் விரைந்து தீா்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். மேலும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மீனவா் அமைப்பு தரப்பில் மூத்த வழக்குரைஞா் பரூக் அகமதி ஆஜராகி, தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் சோ்த்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

மத்திய அரசின் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நட்ராஜ் ஆஜராகி, ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டப்படி, இந்த விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, தங்களது பிரமாணப் பத்திரத்தின் பிரதி கிடைக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும் வகையில் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, நீதிபதிகள் தமிழக அரசின் தரப்பில் எதிா் பதில் மனு தாக்கல் செய்யும் வகையில், இந்த விவகாரத்தை ஜனவரி 18-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனா். மேலும், மகாராஷ்டிர மீனவா் அமைப்பின் மனுவையும் இந்த வழக்குடன் சோ்த்து விசாரிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

முன்னதாக, மத்திய அரசின் தரப்பில் தாக்கலான பிரமாணப் பத்திரத்தில், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய கடல் பகுதியில் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.