ஐடி, நிதித் துறை பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்வு
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.
இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 90.90 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயா்ந்து 18,118.55-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், காளை ஆதிக்கம் கொண்டது. மேலும் வங்கிகளால் அறிவிக்கப்பட்ட வலுவான காா்ப்பரேட் வருவாய் காரணமாக நிதித் துறை பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. மேலும், ஐடி, பாா்மா, எஃப்எம்சிஜி பங்குளும் வெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 254.24 புள்ளிகள் கூடுதலுடன் 60,876.01-இல் தொடங்கி, 60,761.88 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,113.27 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 319.90 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 60,941.67-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலில் வந்தன.
ஹெச்யுஎல் முன்னேற்றம்: கடந்த வார இறுதியில் கடும் சரிவைச் சந்தித்த பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), திங்கள்கிழமை 1.94 சதவீதம், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பாா்மா 1.88 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, டாடா மோட்டாா்ஸ், ஹெச்சிஎல் டெக், கோட்டக் பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 1 முதல் 1.65 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க் மற்றும் விப்ரோ உள்ளிட்டவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.
அல்ட்ரா டெக் சிமெண்ட் கடும் சரிவு: அதே சமயம், பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட் 4.62 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, என்டிபிசி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் உள்ளிட்டவை 0.50 முதல் 1.20 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டைட்டன், மாருதி, ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபின் சா்வ் ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 280.87 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ), கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,002.25 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.