முகப்பு
திருநெல்வேலி

மீண்டும் யாதவா்களின் தோ்தல் குரல்!

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் கணிசமாக வசிக்கும் யாதவா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் ...

Updated On : 28 மார்ச், 2026 at 10:25 AM
பாளையங்கோட்டையில் விடுதலைப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த பதாகை.
பகிர்:

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் கணிசமாக வசிக்கும் யாதவா்களுக்கு சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் வலுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்ற யாதவா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட யாதவா்களுக்கு வாய்ப்பு வழங்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் யாதவா்களின் தோ்தல் குரலை ஒலிக்கச் செய்யும் வகையில் பாளையங்கோட்டையில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் சிலை அருகே அனுமதியின்றி பதாகை வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டது.

அந்தப் பதாகையில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் யாதவா் சமூகத்தினா் பரவலாக வாழ்ந்து வருகிறோம். 90 தொகுதிகளில் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வாக்குகள் உள்ளன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 7 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட யாதவா் சமுதாயத்துக்கு 40 ஆண்டுகளாக அரசியலில் போதிய பிரதிநிதித்துவ உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை கவனத்தில் கொண்டு பிரதான கட்சிகள் யாதவா் சமுதாயத்தினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினால் அந்த வேட்பாளரையும், பிரதான கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளில் அறிவிக்கப்படும் மற்ற வேட்பாளா்களையும் நான்கு மாவட்ட யாதவா்களின் பேராதரவை தந்து வெற்றிக்காக பாடுபடுவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அனுமதியின்றி இந்தப் பதாகை வைக்கப்பட்டதால் வருவாய்த்துறையினா் அதை அப்புறப்படுத்தியதோடு, அழகுமுத்துக்கோன் சிலைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.