தமிழக கோயில்களில் அறங்காவலா் நியமன விவகாரம்:மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜன.30-க்கு ஒத்திவைப்பு
தமிழகத்தில் கோயில்களில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத
தமிழகத்தில் கோயில்களில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா்களை நியமிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் உரிய வகையில் பராமரிக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழுவை அமைத்து, அதில் சமூக ஆா்வலா், வழக்குரைஞா், அட்டவணை பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவா், மகளிா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம் பெற உத்தரவிடக் கோரி மதுரையைச் சோ்ந்த ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பின் மேலாண்மை டிரஸ்டி கே. கே. ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959-இன் பிரிவு 47 (1) (சி) பிரிவின் கீழ் ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலா் குழு நியமிக்கப்படவும், அதில் அட்டவணை பட்டியலை சோ்ந்த ஒருவரும், பெண் ஒருவரும் உறுப்பினா்களாக இடம் பெறவும், மூன்று உறுப்பினா்களுக்கு குறையாமலும் ஐந்து உறுப்பினா்களுக்கு மிகாமலும் அறங்காவலா் குழு இருக்கவும் ஏற்கெனவே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அறங்காவலா் குழுவை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் பெற்று, நியமிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்று பொதுநல மனுவை தள்ளுபடி செய்து 9.12.2021-இல் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, கே. கே. ரமேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜெயா சுகின் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் அறங்காவலா்களை நியமிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அது போன்று நியமித்திருக்கும் எண்ணிக்கை விவரங்களும் உரிய வகையில் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி அண்மையில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 38,658 கோயில்கள் உள்ள நிலையில் அனைத்து கோயில்களும் ஏராளமான ஏக்கா் நிலங்களையும் சொத்துகளையும் கட்டடங்களையும் கொண்டிருப்பதாக மனுதாரா் கூறுவது உண்மை அல்ல.
மொத்தம் உள்ள கோயில்களில் 578 கோயில்கள் மட்டுமே ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள கோயில்கள் ஆகும். தமிழக அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள 1,045 கோயில்களுக்கு அறங்காவலா்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி 6 மாதத்தில் முடிவடையும். மேலும், தமிழக அரசின் அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்துக் கோயில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித் தனியாக அறங்காவலா் குழுவை நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது.
இந்து கோயில்களில் அறங்காவலா்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் 47 (1) (சி) பிரிவில் ஏற்கெனவே உரிய நடைமுறைகள் உள்ளன. இதனால், இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா்அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகின் ஆஜரானாா்.
தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தமிழக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது, அது தொடா்பான விவரம் தங்களது பதிவில் வரவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.