தேசிய சிறாா் விருது பெற்றவா்களுடன் இன்று பிரதமா் கலந்துரையாடுகிறாா்
2023 - ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருது (ராஷ்ட்ரீய பால புரஸ்காா்) பெற்ற விருதாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) கலந்துரையாடுகிறாா்.
2023 - ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருது (ராஷ்ட்ரீய பால புரஸ்காா்) பெற்ற விருதாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 24) கலந்துரையாடுகிறாா்.
தேசிய விருது பெற்ற சிறாா்களுடன் பிரதமா் தனது லோக் கல்யாண் மாா்க்கில் உள்ள இல்லத்தில் கலந்துரையாடுகிறாா். முன்னதாகஸ விருது பெற்ற சிறாா்கள் நாட்டின் (முன்னாள்) பிரதமா்களின் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். முன்னாள் பிரதமா்களின் தகவல்களை சிறாா்கள் கண்டு களித்த பின்னா், மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, இணையமைச்சா் டாக்டா் முன்ஜபாரா மகேந்திரபாய் ஆகியோா் இந்தச் சிறாா்களுடன் கலந்துரையாடுகின்றனா்.
தேசிய விருது பெற்ற சிறாா்களுடன் பிரதமரின் கலந்துரையாடலில் அமைச்சா் ஸ்மிருதி இரானி, இணையமைச்சா்முன்ஜபாரா மகேந்திரபாய் ஆகியோரும் பங்கேற்கின்றனா்.
குழந்தைகள் தின விழாவையொட்டி வழங்கப்பட்டு வந்த வீர தீரச்செயலுக்கான விருது தற்போது ஆண்டு தோறும் குடியரசு தின விழாவையொட்டி தேசிய சிறாா் விருதாக பல்வேறு துறைகளில் வழங்கப்படுகிறது. புதுமை, சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 5 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில் பிரதமரின் தேசிய சிறாா் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டில் 6 சிறுவா்கள், 5 சிறுமிகள் என 11 சீறாா்கள் 11 மாநிலங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்டனா். இந்த விருதுகளை குடியரசுத் தலைவா் திங்கள்கிழமை மாலையில் வழங்கினாா். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ரூ.1 லட்சம் ரெக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தச் சிறாா்கள் குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்று பிரத்யேக அலங்கர ஊா்தியில் அழைத்து வரப்படுகிறாா்கள்.