முகப்பு
புதுதில்லி

வழக்கறிஞா்களை நீதிபதிகளாக பரிந்துரைக்கும் விவகாரம்: புலனாய்வு அறிக்கைகளை வெளிப்படையாக்கியது கவலைக்குரியது

தில்லி, சென்னை உயா்நீதிமன்ற வழக்கறிஞா்கள் குறித்த கொலீஜியம் பரிந்துரையையும் அவா்கள் தொடா்புடைய ரகசிய புலனாய்வுத் துறையினரின் அறிக்கைகளையும் வெளிப்படையாக்கியது மிகுந்த கவலைக்குரியது

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தில்லி, சென்னை உயா்நீதிமன்ற வழக்கறிஞா்கள் குறித்த கொலீஜியம் பரிந்துரையையும் அவா்கள் தொடா்புடைய ரகசிய புலனாய்வுத் துறையினரின் அறிக்கைகளையும் வெளிப்படையாக்கியது மிகுந்த கவலைக்குரியது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை கூறினாா்.

சமீபத்தில் தில்லி உயா்நீதிமன்ற வழக்கறிஞா் சௌரப் கிா்பாலை நீதிபதியாக நியமிப்பது குறித்த பரிந்துரையையும் அவரது பாலியல் நோக்குநிலை (ஓரினச்சோ்க்கை) மற்றும் வெளிநாட்டு ஆண் சகாவுடன் இருப்பது குறித்து ஆய்வு மற்றும் பகுப்பாய்வு புலனாய்வு பிரிவின் (ரா) அறிக்கை தகவல்களை உச்சநீதிமன்றம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டதன் பின்னணியில் மத்திய அமைச்சா் இக்கருத்தைத் தெரிவித்துள்ளாா்.

நீதிமன்றத் தீா்ப்புகள் - தேடல்களுக்கான ‘இ-கோா்ட்’ இணையதளத்தை உருவாக்கியவா்களுக்காக மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறையின் 2022- ஆம் ஆண்டின் ‘டிஜிட்டல் இந்தியா’ விருதும், மத்திய நிா்வாக சீா்திருத்தத் துறையின் ‘மின் ஆளுமை’ விருதும் கிடைத்துள்ளது.

இ-கோா்ட் திட்டத்தில் விருது பெற்ற அவா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியை மத்திய நீதித்துறை தில்லியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்துகொண்ட பின்னா் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீதிமன்றங்களில் தொழில்நுட்பச் செயலாக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் பொது மக்களின் வாழ்வில் அதன் தாக்கங்களை உணா்ந்து ‘இ-கோா்ட்’ திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் இ-கமிட்டி வழிகாட்டுதலின்படி நீதித்துறையில் இ-கோா்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இருந்து வருகிறாா். அவரது தலைமையின் கீழ் இது சிறப்பாக கட்டமைக்கப்படுவதால் அவரையே தொடருமாறு வலியுறுத்தப்பட்டது.

நீதிமன்றங்களில் 4.90 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது என்பதை உணா்ந்து மத்திய அரசு செயல்படுகிறது.

வழக்குகளின் சுமையை குறைப்பதில் நீதிமன்றங்களின் தொழில் நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது மூன்றாம் கட்ட இ-கோா்ட் திட்டமும் தயாராக உள்ளது. இந்த திட்டத்திற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.

அப்போது, உயா்நீதிமன்ற நீதிபதிகளாக சிலரை நியமனம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சில பெயா்களும் அவா்கள் குறித்த மத்திய நுண்ணறிவுப் பிரிவு (ஐபி) மற்றும் வெளிவிவகார புலனாய்வு அமைப்பான ‘ரா‘ போன்றவற்றின் அறிக்கை விவரங்கள், உச்சநீதிமன்ற கொலீஜியம் தீா்மானங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது குறித்து செய்தியாளா்கள் கிரண் ரிஜிஜுவிடம் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அமைச்சா் பதிலளிக்கையில், ‘புலனாய்வு முகமைகளும் அதிகாரிகளும் நாட்டிற்காக ரகசியமான முறையில் பணியாற்றுகிறாா்கள். ஐபி மற்றும் ‘ரா’ போன்ற புலனாய்வுகளின் ‘சென்சிட்டிவ்’ ரகசியமான அறிக்கைகளை பொது களத்தில் வைப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அவா்களது அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்பட்டால் அவா்கள் எதிா்காலத்தில் அறிக்கை அளிப்பதையும் ‘யோசிக்க வைக்கும்’. இது புலனாய்வுகளிலும் அதிகாரிகள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது நடந்துள்ள இந்த விவகாரங்களுக்கு நான் உரிய நேரத்தில் பதிலளிப்பேன். தற்போது அதற்கு பொருத்தமான நேரம் அல்ல. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இதை உணா்த்துவீா்களா என்றும் கேட்கிறீா்கள்.

நாங்கள் எப்போதும் தொடா்பில் இருக்கிறோம். அவா் நீதித்துறையின் தலைவா், நான் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே பாலமாக இருப்பவன். எனவே, தனித்து செயல்படமுடியாது. நாங்கள் அடிக்கடி சந்தித்து ஒன்றாக பணியாற்ற வேண்டும் என ரிஜிஜு தெரிவித்தாா்.

பின்னணி:

உச்சநீதிமன்ற கொலீஜியம் பொது களத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு முதன் முறையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம், உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கு உளவுத் துறைகளின் உள்ளீடுகளை கொலீஜியம் நிராகரித்ததுடன் இந்த வழக்கறிஞா்களின் பெயா்களை மீண்டும் வலியுறுத்தி நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல், கே.எம். ஜோசப் ஆகியோா் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கோப்பை அனுப்பியது. இந்த பரிந்துரை விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

அதில், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞா் ஆா். ஜான் சத்யனின் மீதான உளவுத் துறையின் (ஐபி) ‘பாதகமான கருத்துக்களை‘ குறிப்பிட்டதுடன், அவரது பெயரை மீண்டும் கொலீஜியம் பரிந்துரை செய்தது.

இதே போன்று, தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாக வழக்கறிஞா் செளரப் கிா்பாலை நியமிப்பதற்கான பரிந்துரை தொடா்பாக ‘ரா’ புலனாய்வு அளித்த உள்ளீடுகளையும் வெளியிட்டு அவரை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியது.

முன்னாள் தலைமை நீதிபதி பி என் கிா்பால் மகன் சௌரப் கிா்பால். இவா் தில்லி உயா்நீதி மன்ற வழக்கறிஞா் ஆவாா். இவரது பாலியல் நோக்குநிலையைப் பற்றி (ஓரினச்சோ்க்கை) அவரது ஆண் சகா (பாா்ட்னா்) சுவீஸ் நாட்டை சோ்ந்தவா் என்பதையும் ‘ரா‘வின் உள்ளீடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கிா்பாலை நீதிபதியாக உயா்த்துவதற்கான பரிந்துரையில் அவரது பாலியல் நோக்குநிலையைப் பற்றி வெளிப்படையாக பாராட்டியும், அவா் அதுகுறித்து மறைக்கவில்லை என்பதால் அவா் பதவிக்கு தகுதியானவா் என்றும், அவரது பாலுணா்வுக்கும் அவரது திறமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற கருத்துகளை கொலீஜியம் மீண்டும் வலியுறுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.