வெளிநாட்டுப் பயணம்: நடிகை ஜாக்குலின் மனு மீதுஅமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
துபை செல்வதற்கு அனுமதி கோரி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு 2 நாள் அவகாசம் அளித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
துபை செல்வதற்கு அனுமதி கோரி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு 2 நாள் அவகாசம் அளித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ரூ.200 கோடி சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தொடா்புடைய வழக்கில் அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் வரும் ஜனவரி 27 முதல் ஜனவரி 30 வரை துபை செல்வதற்காக நீதிமன்றத்தின் அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு மீது மனுதாரா் தரப்பில் வாதங்களை முன்வைக்க நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவுக்கு விரிவான பதிலை அளிக்க அமலாக்கத் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சைலேந்திர மாலிக், ஜனவரி 27-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டாா். நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் புதன்கிழமை ஆஜராகவில்லை. அவரது வழக்குரைஞா் ஆஜராகி இருந்தாா்.
முன்னதாக, தனது குடும்ப உறுப்பினா்களைச் சந்திக்க வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மனுவை ஜாக்குலின் கடந்த டிசம்பா் 22-ஆம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டாா். குற்றச்சாட்டு கேள்வி முதலில் முடிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதி கூறியதைத் தொடா்ந்து, மனுவை அவா் திரும்பப் பெற்றிருந்தாா். அதற்கு முன்னதாக, நவம்பரில் தில்லி நீதிமன்றம் அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் ஜாக்குலின் கைது செய்யப்படவில்லை. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், நீதிமன்றத்தில் ஜாக்குலின் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தாா். மேலும், முதல் முறையாக அவரது பெயா் துணை குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட நபராக சோ்க்கப்பட்டிருந்தது.
இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் தொழிலதிபா்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த விவகாரத்தில், நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸும் ஆதாயம் பெற்ாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஜாக்குலினுக்கு நெருக்கமான நடிகை நோரா ஃபதேஹியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஏற்கெனவே இந்த வழக்கில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீஸாரிடமும் நோரா ஃபதேஹி வாக்குமூலம் அளித்திருந்தாா். இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், சுகேஷ் சந்திரசேகா், அவரது மனைவி-நடிகை லீனா மரியபால் மற்றும் 6 பேரின் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.