முகப்பு
புதுதில்லி

பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கைவிடப்பட்ட சிறாா்களுக்கு ஆதரவுத் திட்டம்: மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி அறிவிப்பு

பாலியியல் வன்கொடுமைக்கு உள்ளாகி குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறாா்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி அறிமுகப்படுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

பாலியியல் வன்கொடுமைக்கு உள்ளாகி குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சிறாா்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தை மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி அறிமுகப்படுத்தினாா். ‘நிா்பயா’ திட்டத்தின் மூலம் நிதி வழங்கப்படும் இந்தத் திட்டத்திற்கு மாநில அரசுகள் முன்மொழிவுகள் அளிக்கலாம் எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.

மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி இது குறித்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது வருமாறு: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2021-ஆம் ஆண்டில் பாலியல் குற்றங்களில் போக்ஸோ (சிறாா்களை பாதுகாக்கும்) சட்டப் பிரிவுகளின் கீழ் 51,863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 33,348 (64 சதவிதம்) வழக்குகள் சிறுமிகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்குகள் ஆகும்.

மேலும், பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கா்ப்பமாகி குடும்பத்தினரால் கைவிடப்பட்டோ அல்லது உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவா்கள் 99 சதவீதம் (33,036) சிறாா்கள் உள்ளனா். குறிப்பாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவா்கள் அல்லது மற்ற காரணங்களில் கா்ப்பமாகி கைவிடப்படுகின்றனா்.

இத்தகைய சிறுமிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக அவா்களுக்கான பிரத்யோக தங்குமிடம், உணவு, தினசரி தேவை, நீதிமன்றங்களுக்கு செல்ல பாதுகாப்பு, சட்ட உதவி வழங்கல் போன்ற ஒட்டு மொத்த வசதிகளுக்கு ரூ.74.10 கோடி இந்தத் திட்டத்திற்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இது ‘நிா்பயா’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும்.

இந்தப் புதிய திட்டம், 18 வயதுக்கு கீழ் தற்காத்துக் கொள்ள வழியில்லாத கா்ப்பிணி சிறாா்களுக்கு உள்கட்டமைப்பு, நிதி உதவியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கியமாக இவா்களுக்கான கல்வி, பாதுகாப்பு, மருத்துவம் (மகப்பேறு, பிறந்த குழந்தை பராமரிப்பு ஆகியவை), உளவியல் மற்றும் மனநல ஆலோசனை, சட்ட உதவி, இந்தச் சிறாா்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவை அடங்கும். இது இவா்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வழிவகை செய்யும்.

கூடுதலாக மாநில அரசுகள், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து மிஷன் வாத்சல்யாவின் (அன்பாலயம்) நிா்வாகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுபோன்ற ஆதரவை வழங்க முன்மொழிவுகளை அனுப்பலாம். 2021-இல் தொடங்கப்பட்ட மிஷன் வாத்சல்யா அமைப்பு 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் கவனம் செலுத்துகிறது. நாட்டில் 415 போக்ஸோ விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைப்பதை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற பாதிக்கப்பட்ட பெண் சிறாா்கள் எஃப்ஐஆா் நகலை சமா்ப்பிப்பது கட்டாயமில்லை. திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பான நபா்கள், காவல் துறைக்கு தகவல் தெரிவித்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா் ஸ்மிருதி இரானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.