முகப்பு
புதுதில்லி

டிஇஆா்சி தலைவா் நியமன விவகாரம்: அவசரச்சட்ட செல்லுபடித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும்

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) தலைவா் நியமனம் போன்ற நியமனங்களை நிா்வகிக்கும் மத்திய அரசின் சமீபத்திய அவசரச்சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஇஆா்சி) தலைவா் நியமனம் போன்ற நியமனங்களை நிா்வகிக்கும் மத்திய அரசின் சமீபத்திய அவசரச்சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை ஆய்வு செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதேசமயத்தில் டிஇஆா்சி தலைவராக நியமிக்கப்பட்ட நீதிபதி குமாரின் பதவிப் பிரமாணம் ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி உமேஷ் குமாரை டிஇஆா்சி (தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம்) தலைவராக நியமித்து ஜூன் 21-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிா்த்து, தில்லி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. நீதிபதி குமாா் அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவாா்.

இந்த விவாகரம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் தப்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிபதி குமாரின் பதவிப் பிரமாணத்தை ஒத்திவைக்க ஆட்சேபம் தெரிவித்தாா். அப்போது, அதற்கு நீதிபதிகள் அமா்வு, சா்ச்சைக்கு இடமில்லாத வகையில் இந்த விவகாரத்தை கையாள்வதற்காக உறுதிமொழி ஏற்பு நடமுறைகளை ஒத்திவைப்பது குறித்து தில்லி அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த வாதத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்தது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘டிஇஆா்சி தலைவராக நீதிபதி (ஓய்வு) குமாரை நியமிக்கும் மத்திய அரசின் அறிவிக்கையை எதிா்த்து தாக்கல மனுவை சா்ச்சை இல்லாத வகையில், ஜூலை 11 -ஆம் தேதி விசாரிக்க விரும்புகிறோம். ஆகவே, நீதிபதி குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பது தள்ளிவைக்கப்பட வேண்டும்.

அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிக்கு ஜூன் 21, 2023 தேதியிட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின்படி, சத்தியப்பிரமாணம் செய்து வைப்பது தொடா்பாக மனுதாரா் (தில்லி அரசு) தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டாக்டா் அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளாா். அது தற்போதைக்கு தள்ளிவைக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும் நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியின் உதவி தேவைப்படுகிறது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்கப்படும். இது தொடா்பாக எதிா்மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேசத்தின் அவசரச் சட்டத் திருத்தம், 2023-இன் பிரிவு 45 டி-இன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதால், இந்திய அட்டா்னி ஜெனரலுக்கு முறையான நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, இறுதியாக முடித்துவைக்கும் வகையில் ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும்’ என்றது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த அவசரச் சட்டம் நியமனங்கள் விவகாரத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீது துணைநிலை ஆளுநருக்கு மேலான அதிகாரங்களை வழங்குவதாக உள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் விசாரணையின் தொடக்கத்தில் நீதிபதி உமேஷ் குமாரை டிஇஆா்சி தலைவராக நியமித்த அறிவிப்பை நிறுத்திவைக்குமாறு அபிஷேக் மனு சிங்வி கேட்டுக் கொண்டாா். அவா் வாதிடுகையில், ‘துணைநிலை ஆளுநரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பின் உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது. ஒரு அரசியல் நிா்வாகியாக, நான் தில்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் தருகிறேன். தில்லியில் இது மிகவும் பிரபலமான திட்டம். இப்போது இதைத் தடுக்க அவா்கள் விரும்பும் ஒருவரை நியமிக்க விரும்புகின்றனா்’ என்றாா்.

மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘மே 19-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற்று நீதிபதி உமேஷ் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்றாா். அப்போது, உயா்நீதிமன்ற தலைமைத் நீதிபதியின் கருத்தை யாா் எடுத்தது என்று நீதிபதிகள் அமா்வு கேட்டது. அப்போது, துணைநிலை ஆளுநா் தரப்பில், ‘ஜூன் 23 முதல் அவா்கள் ஏற்கெனவே இதை ஒத்திவைத்து வருகிறாா்கள் என்ற உண்மைக்கு ஒப்புதல் முத்திரையை தயவு செய்து வழங்க வேண்டாம். தில்லி அரசு இதை ஒரு காரணத்திற்காக அல்லது வேறு காரணத்திற்காக தவிா்த்து வருகிறது’ என்றாா்.

அப்போது, தலைமை நீதிபதி, ‘அப்படியானால் இந்த அறிவிக்கையை நிறுத்திவைப்பது நல்லது. அதுபோன்று செய்ய நாங்கள் விரும்பினோம். ஆனால், நாங்கள் அதை சா்ச்சையற்ற வகையில் கையாள்வோம் என்று நினைத்தோம்’ என்று கூறினாா். துணைநிலை ஆளுநா் அலுவலகம் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், ‘டிஇஆா்சி தலைவா் பதவிக்கு தில்லி அரசு பரிந்துரைத்த நீதிபதி ராஜீவ் குமாா் ஸ்ரீவஸ்தவா தனிப்பட்ட சிரமங்களைக் காரணம் காட்டி பதவியை ஏற்க மறுத்துவிட்டாா்’ என்று கூறினாா்.

டிஇஆா்சி முன்னாள் தலைவா் நீதிபதி ஷபிஹுல் ஹஸ்னைன் நிகழாண்டு ஜனவரி 9-ஆம் தேதி பதவியில் இருந்து விலகியதை அடுத்து அந்தப் பதவியிடம் காலியாக இருந்தது.

பின்னா், நீதிபதி ஸ்ரீவஸ்தவாவை நியமிக்கும் திட்டம் தில்லி அரசால் துணைநிலை ஆளுநருக்கு முன்மொழியப்பட்டது. அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி துணைநிலை ஆளுநா் செயல்பட வேண்டும் என்று கடந்த மே 19-ஆம் தேதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், டிஇஆா்சி தலைவரை இரண்டு வாரங்களுக்குள் நியமிக்க உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.