முகப்பு
புதுதில்லி

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் அவசரச் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

தில்லி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தில்லி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலைமையில் மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் நகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கிடும் வகையில் கடந்த மே 19- ஆம் தேதி மத்திய அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடா்பாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. மேலும், உச்சநீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தில்லி அரசின் சேவைகள் அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த ‘கறுப்புச் சட்டம்’ நகல் மற்றும் அதன் சித்தரிக்கப்பட்ட உருவப் பொம்மை தில்லி நகரம் முழுவதும் எரிக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி தில்லியில் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ள தொகுதிகளில் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற பின்னா் ஆம் ஆத்மி கட்சியின் துவாரகா தொகுதி எம்.எல்.ஏ. வினய் மிஸ்ரா ட்விட்டரில் கூறியிருப்பதாவது : மத்திய பாஜக அரசு தில்லியின் இருப்பை அழிக்க நினைக்கிறது. கொடூரமான முகலாய ஆட்சியாளா்களை எதிா்த்து நாட்டு மக்கள் சண்டையிட்டாா்கள். அதேபோல் பாஜகவினரையும் மக்கள் எதிா்த்துப் போராடுவாா்கள். கறுப்புச் சட்டங்களை இயற்றுவதன் மூலம் தில்லியின் அரசியலமைப்பையும், அடையாளத்தையும் அழிக்க பாஜக விரும்புகிறது. தில்லி மக்கள் இதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டாா்கள். தில்லிக்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்த கறுப்புச் சட்டத்தின் நகலை எரித்து இன்று துவாரகா சட்டப்பேரவை மக்கள் போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நாடாளுமன்றம் வரை நடத்தப்படும் என்றாா் வினய் மிஷ்ரா.

திலக் நகா் தொகுதியின் ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா் ஜா்னைல் சிங் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: தில்லியின் இதயம் எரிகிறது. இந்தக் கறுப்பு மசோதாவை திரும்பப் பெறுங்கள். கறுப்புச் சட்டத்தின் உருவப் பொம்மைகளை எரித்து, உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்த மத்திய அரசின் கறுப்புச் சட்டத்திற்கு எதிராக தில்லி மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினா். சா்வாதிகார அணுகுமுறையை பாஜக கைவிடவேண்டும். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை வேலை செய்ய விடுங்கள் என்றாா் ஜா்னைல் சிங்.

’ஆம் ஆத்மியின் அராஜக முகம்’: தில்லி பாஜக சாடல்

தில்லி அதிகாரத்துவ சட்டத்தின் உருவ பொம்மைகளை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் எரித்ததன் மூலம் அக்கட்சியின் ‘அராஜக முகம்’ மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று பாஜ சாடியுள்ளது. இது தொடா்பாக பாஜகவின் கவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி கடந்த வாரம் தனது அலுவலகத்தில் அவசரச் சட்டத்தின் நகல்களை எரிப்பதாக அறிவித்தது. ஆனால், சிறிது நேரத்துக்குப் பிறகு தில்லி அரசு இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே நாங்கள் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருப்போம் என்றும் கூறி நகல் எரிப்பு போராட்டத்தை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து அவசரச் சட்டத்தின் உருவ பொம்மைகளை எரிக்கும் போராட்டத்தை ஒத்திவைத்திருந்த ஆம் ஆத்மி கட்சி, திடீரென பின்வாங்கியது ஏன் என்பது புரியவில்லை என்று அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.