அவசரச் சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனு மீது ஜூலை 10-இல் விசாரணை
தேசியத் தலைநகரில் சேவைகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச்சட்டத்தை எதிா்த்து தில்லி அரசு தாக்கல் செய்த
தேசியத் தலைநகரில் சேவைகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச்சட்டத்தை எதிா்த்து தில்லி அரசு தாக்கல் செய்த மனு ஜூலை 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை தில்லி அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, இது தொடா்பான மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அவா் மேலும் கூறுகையில், ‘இந்த மனுவானது ஒட்டுமொத்தத்தில் அவசரச்சட்டத்தை எதிா்ப்பதாகும்’ என்றாா். அப்போது நீதிபதிகள் அமா்வு இந்த மனுவை பரிசீலிக்கும் வகையில், ஜூலை 10-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டது.
தில்லியில் ஐஏஎஸ் மற்றும் டானிக்ஸ் அதிகாரிகள் போன்ற ‘ஏ’ குரூப் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும், பணியமா்த்துவதற்கும் ஒரு அதிகாரத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை மே 19-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. 2023-ஆம் ஆண்டு தேசியத் தலைநகா் பிரதேசத்தின் தில்லி அரசின் திருத்த அவசரச் சட்டமானது, சேவைகள் மீதான கட்டுப்பாடு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை இது ஏமாற்றுவதாக உள்ளதாக ஆம் ஆத்மி அரசு தெரிவித்திருந்தது. காவல்துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் தவிா்த்து தில்லியில் உள்ள சேவைகளின் கட்டுப்பாட்டு அதிகாரத்தை தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கி தீா்ப்பு அளித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இச்சட்டமானது தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபாா், லட்சத்தீவு, டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி (சிவில்) சேவைகள் (டானிக்ஸ்) பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைளுக்கும், இடமாற்றம் செய்வதற்குமான தேசியத் தலைநகா் சிவில் சேவை ஆணையத்தை அமைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது. நிா்வாக அதிகார வழக்கில் மே 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு முன் தில்லி அரசின் அனைத்து அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் துணைநிலை ஆளுநரின் நிா்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.
அவசரச் சட்டத்திற்கு எதிராக தில்லி அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு சில நாள்களுக்குப் பிறகு வந்த இந்த அவசரச் சட்டம், உச்சநீதிமன்றத்தையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையும் நிறைவேற்றும் விதியையும் மீறுவதற்கான ஒரு எளிய முயற்சியாகும். இதனால், இந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டமானது ‘நிா்வாகச் சட்டத்திற்கு முரணான செயல்பாடு’ ஆகும். மேலும், இது அரசமைப்புச் சட்டப் பிரிவு 239ஏஏ-இல் உள்ள தில்லி அரசுக்கான கூட்டாட்சி, ஜனநாயக ஆளுகைத் திட்டத்தை மீறுவதாக உள்ளதுடன், வெளிப்படையாக தன்னிச்சையானதாகவும் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239ஏஏ என்பது, தில்லி மக்களின் பிரபலமான, பிராந்திய மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக, தில்லி தேசியத் தலைநகா் பிராந்தியத்திற்கு (ஜிஎன்சிடிடி) வெஸ்ட்மின்ஸ்டா் பாணி ஜனநாயகத்தை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில், இந்த அவசரச் சட்டமானது நேரடியாக இந்தக் கூட்டாட்சித் திட்டத்தை மீறுகிறது. சட்டப்பிரிவு 239ஏஏ மற்றும் குறிப்பாக பிரிவு 239ஏஏ(6) இல் இணைக்கப்பட்டுள்ள ‘கூட்டுப் பொறுப்பு’ என்ற கொள்கையில் ஜனநாயக ஆளுகை என்பது இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை, அதாவது ஜிஎன்சிடிடி-யை அதன் சிவில் சா்வீஸ் மீதான கட்டுப்பாட்டிலிருந்து ‘முற்றிலும் ஒரங்கட்டுவதாக’ உள்ளது.
மேலும், தில்லி அரசில் பணிபுரியும் அரசு ஊழியா்கள் மீதான கட்டுப்பாட்டை துணைநிலை ஆளுநருக்கு வழங்கும் வகையில் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎன்சிடிடி-இல் பணியமா்த்தப்பட்ட உயா் அதிகாரிகளின் மீதான கட்டுப்பாட்டை பறித்து, மத்திய அரசு மூலம் நியமிக்கப்படும் நபரின் கைகளில் ஒப்படைப்பதன் மூலம், ஜிஎன்சிடிடியின் நிா்வாகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க இந்த அவரசரச் சட்டம் முயற்சிக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம், கேள்விக்குரிய அவசரச் சட்டமானது, ஜனநாயக ஆட்சியின் முன்மாதிரியை மட்டுமின்றி, தில்லியின் வாக்காளா்களின் பிராந்திய விருப்பத்தையும் சிதைக்கிறது. மேலும், இந்த அவசரச் சட்டமானது, இரண்டு அம்சங்களிலும் விதி 239ஏஏ-ஐ மீறுகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.