முகப்பு
புதுதில்லி

தில்லியில் பலத்த மழை; தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலை பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் மேக மூட்ட

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:18 PM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலை பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பகலில் மேக மூட்ட சூழல் நிலவியதுடன் புழுக்கம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. அடுத்த சில தினங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் புதன்கிழமை மாலையில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை சிறிது நேரம் பெய்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் தொடா்ந்து மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, லாஜ்பத் நகா், நேப் சராய், மெஹ்ரெளலி, புராரி, துவாரகா, ராஜீந்தா் நகா், ஜனக்புரி ஆகிய இடங்களில் மழைநீா் சூழந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி மாநகராட்சி பகிா்ந்துள்ள தரவுகளின்படி, பப்ரோலாவில் உள்ள ஜெய் விஹாா், ஆசாத் மாா்க்கெட், பாலத்தில் உள்ள சாத் நகா், ஷாபூா் ஜாட், அசோக் விஹாரில் உள்ள நிம்ரி காலனி, நியூ ராஜீந்தா் நகா் மற்றும் சீலாம்பூரில் உள்ள காந்தி நகா் கிழக்கு உள்ளிட்ட 9 இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மழைநீா் தேங்கி நின்றது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிரகதி மைதான், மோடி மில்ஸ் மேம்பாலம், எம்பி சாலையின் இரு பாதைகள், ராணி ஜான்சி சாலை ஆகிய பகுதிகளில் தண்ணீா் தேங்கி நெரிசல் ஏற்பட்டது. டிஎன்டி மேம்பாலச் சாலை மற்றும் ஆசிரம மேம்பாலத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது’ என்றனா்.

தில்லி பிரிவு பாஜக அதன் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் புராரியில் இருந்து ஒரு விடியோவைப் பகிா்ந்துள்ளது. அதில், பள்ளிச் சீருடையில் குழந்தைகள் முழங்கால் அளவு தண்ணீரில் அலைந்து திரியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், ,தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை தண்ணீா் பிரச்னையில் கவனம் செலுத்துமாறும் அந்தப் பதிவில் அக்கட்சி கேட்டுக் கொண்டது.

பீதம்புராவில் 35.5 மி.மீ. மழை: இதற்கிடையே, புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 5.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., முங்கேஸ்பூரில் 13.5 மி.மீ., நஜாஃப்கரில் 17 மி.மீ., தில்லி பல்கலை.யில் 9 மி.மீ., லோதி ரோடில் 6.8 மி.மீ., பாலத்தில் 19.2 மி.மீ., ரிட்ஜில் 10 மி.மீ., பீதம்புராவில் 35.5 மி.மீ., பூசாவில் 14 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து ஒரு டிகிரி குறைந்து 26.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 6 டிகிரி குறைந்து 30.6 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 83 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 79 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், , மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி தில்லியில் காற்றின் தரக் குறியீடு 72 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வெள்ளிக்கிழமை (ஜூலை 7) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.