முகப்பு
புதுதில்லி

கன மழையால் ஆம் ஆத்மி ஆட்சி அம்பலப்பட்டுவிட்டது: தில்லி காங்கிரஸ் சாடல்

தேசியத் தலைநகா் தில்லியில் பெய்த கனமழை, ஆம் ஆத்மியின் ’இரட்டை இயந்திர’ அரசை முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:01 PM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் பெய்த கனமழை, ஆம் ஆத்மியின் ’இரட்டை இயந்திர’ அரசை முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தில்லியில் சனிக்கிழமை பல மணிநேரம் பலத்த கனமழை பெய்தது. இதனால், நகரத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் நீா் தேங்கி, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தில்லியில் சனிக்கிழமை காலை முதல் பெய்த பருவமழையால், சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் மூலம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இரட்டை இயந்திரம் அரசு முற்றிலும் அம்பலமாகியுள்ளது.

தில்லி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சா் அதிஷி மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் பருவமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தனா். ஆனால், அவா்களின் வாக்குறுதி அனைத்தும் சனிக்கிழமை பெய்த கனமழையில் மூழ்கிவிட்டன.

நகரம் முழுவதும் பல மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தில்லியில் கேஜரிவால் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, வடிகால்களில் தூா்வாரும் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை.

மாநகராட்சி தோ்தலுக்கு முன்பாக தில்லியை உலகத் தரம் வாய்ந்த தலைநகராக மாற்றி, அனைத்து பிரச்னைகளையும் தீா்த்து வைப்பேன் என்று தில்லி மக்களுக்கு கேஜரிவால் வாக்குறுதி அளித்திருந்தாா். ஆனால், நிகழாண்டின் முதல் பெரும் பருவமழை அவரது பொய்களை அம்பலப்படுத்திவிட்டது.

மழைநீா் தேக்கத்தால் ஏற்பட்ட வெள்ளம், சேதமடைந்த சாலைகள் வாகனப் போக்குவரத்தை மொத்தமாக நிறுத்தியது. பொதுமக்கள் நெரிசல் நிறைந்த சாலைகளில் பல மணிநேரம் சிக்கித் தவித்தனா்.

நாட்டின் பிற மாநிலங்களுக்கு கேஜரிவாலின் வழக்கமான அரசியல் சுற்றுலா மற்றும் பொதுப் பணித் துறையை அதிஷி போன்ற அனுபவமற்ற அமைச்சரிடம் ஒப்படைத்ததன் காரணமாக, தில்லி மக்கள் பாதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா் என்றாா் அனில் குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.