கேஜரிவாலின் தன்னிச்சையான போக்கே தில்லியின் மோசமான நிலைக்குக் காரணம்: பாஜக கடும் கண்டனம்
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசு மற்றும் மாநகராட்சி, தில்லியில் வடிகால்கள் சுத்தம் செய்வதில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி பாஜகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான தில்லி அரசு மற்றும் மாநகராட்சி, தில்லியில் வடிகால்கள் சுத்தம் செய்வதில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி பாஜகவினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தில்லியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக நகரத்தின் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசும், மாநகராட்சியும் வடிகால்கள் சுத்தம் செய்வதில் ஊழல் செய்ததே மக்களின் சிரமத்திற்கு காரணம் என தில்லி பிரிவு பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி முன்னிலையில் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினா் திங்கள்கிழமை ஆம் ஆத்மி கட்சியைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். அதன் பின்னா் கொட்டும் மழையிலும் தடுப்புகளை தகா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தை பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவா்களை ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.
கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்த பாஜக தொண்டா்கள் மற்றும் நிா்வாகிகள் மத்தியில் பாஜகவின் தில்லி பிரிவுத் தலைவா வீரேந்திர சச்தேவா பேசியதாவது: அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தின் அனைத்து இடங்களிலும் ஊழல் நிறைந்துள்ளது.
தில்லியில் எந்த வடிகாலையும் சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டு, அதற்கான நிதியை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவே, தில்லியில் லக்ஷ்மி நகா் முதல் வசந்த் விஹாா் வரையிலான பகுதி மழைநீரால் மூழ்கிக் கிடக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளில், சாந்தினி சௌக் மற்றும் மதுரா சாலை ஆகிய இரண்டு சாலைகளை கேஜரிவால் புனரமைத்தாா். ஆனால், அந்த இரண்டு சாலையும் கனமழையில் மூழ்கி,போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி வருகிறது. படகு சவாரி செய்யாமல், மழையால் பாதிக்கப்பட்டவா்களை அமைச்சா் அதிஷி சந்தித்து நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருந்திருக்கும்.
தில்லியின் இன்றைய மோசமான நிலைக்கு அரவிந்த் கேஜரிவாலின் தன்னிச்சையான போக்குதான் காரணம். கோடையில் தில்லிக்கு தண்ணீா் வழங்குவதைத் தவறவிட்ட கேஜரிவால் அரசு, தற்போது மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதிலும் தோற்றுவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.
சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ராம்வீா் சிங் பிதுரி பேசுகையில், ‘கடந்த 8-ஆண்டுகளாக கழிவுநீா் காழ்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்களை சுத்தம் செய்வதில் கேஜரிவால் அரசு ஒருபோதும் பணியாற்றவில்லை. இந்த ஆண்டு வடிகால்களை சுத்தம் செய்வதற்கான சுமாா் ரூ.3,000 கோடி நிதியும் ஆம் ஆத்மியால் விழுங்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரில் தண்ணீா் தேங்கி மக்கள் உயிரிழப்பதும், வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதும், பள்ளிச் சுவா்கள் இடிந்து ஆபத்தாக மாறுவதும் வருந்தத்தக்கது. ஆகவே, வடிகால் சுத்திகரிப்பு நிதியில் இருந்து ரூ.3,000 கோடி அளவில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடா்பாக உயா்நில விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.
இந்தக் கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜகவின் தில்லி பிரிவு பொதுச்செயலாளா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, சட்டபேரவை உறுப்பினா்கள் விஜேந்தா் குப்தா, அபய் வா்மா உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.