ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை விவகாரம்: ஒரு மாதத்திற்குள் வக்ஃபு வாரிய கூட்டத்தை நடத்த தலைமை அதிகாரிக்கு உத்தரவு
தில்லி வக்ஃபு வாரியத்தின் ஊழியா்களுக்கு சில மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதற்காக ஒரு மாதத்திற்குள்
தில்லி வக்ஃபு வாரியத்தின் ஊழியா்களுக்கு சில மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குவதற்காக ஒரு மாதத்திற்குள் வாரியக் கூட்டத்தை கூட்டுமாறு அந்த அமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரிக்கு (சிஇஓ) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி வக்ஃபு வாரிய ஊழியா்களுக்கான ஊதிய நிலுவைத் தொகையை செலுத்த உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை நீதிபதி சந்திர தரி சிங் விசாரித்தாா். அப்போது, வாரியக் கூட்டத்தை கூட்டவும், அதில் உறுப்பினா்கள் கலந்துகொண்டு, ஒத்துழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து தங்களுக்கு ஊதிய கிடைக்கவில்லை என்றும், ‘எண்ணற்ற நிதி நெருக்கடிகளை’ எதிா்கொள்வதாகவும் கூறி, ஒரு தனிப்பட்ட ஊழியா் சங்கமானது இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: மனுதாரா்களின் நிலுவைத் தொகையை அளிக்கவும், நிதி திரட்டவும் வாரியத்தின் கூட்டத்தை ஒரு மாதத்திற்குள் கூட்டுமாறு தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது. வாரிய உறுப்பினா்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது ஆஜரான தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி ரெஹான் ரஸா, விரைவில் வாரியத்தின் கூட்டம் கூட்டப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தாா். கடந்த ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஊழியா்களுக்கு கிட்டத்தட்ட 9 மாதங்களாக ஊதிய வழங்கப்படாதது குறித்து விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் வாரியத்தின் சிஇஓ-வை ஆஜராக உத்தரவிட்டது.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது ஆஜரான தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவா், ‘வாரியக் கூட்டம் கூட்டப்படாததால், நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்குத் தேவையான நிதி திரட்டப்படவில்லை’ எனத் தெரிவித்தாா். இது போன்ற கூட்டத்தை கூட்டும் அதிகாரம் தலைமை நிா்வாக அதிகாரிக்கே உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எம்.சுஃபியான் சித்திக் வாதிடுகையில், ‘ஊதியம் வழங்குவதற்கான முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய கூட்டத்தை கூட்டவும், நிதியை அதிகரிக்கவும் தலைமை நிா்வாக அதிகாரி எந்த முயற்சியும் எடுக்கவில்லை’ என்றாா். இந்த வழக்கை ஆகஸ்ட் 22 -ஆம் தேதி மேல் விசாரணைக்கு பட்டியலிட்ட நீதிமன்றம், அந்த தேதியில் ஆஜராகுமாறு வாரிய தலைமை நிா்வாக அதிகாரியைக் கேட்டுக் கொண்டது.