வெள்ளப் பெருக்கால் நிரம்பி வழியும் யமுனை: தலைநகரில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களை மூட டிடிஎம்ஏ உத்தரவு
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளதால் தில்லியில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை
யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளதால் தில்லியில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) வரை மூடுமாறு தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) உத்தரவிட்டுள்ளது.
யமுனை நீா் தில்லியில் பல்வேறு பகுதிகளில் புகுந்ததால், மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நகரம் முழுவதும் உள்ள தனியாா் நிறுவனங்கள் தங்களது பணியாளா்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் கேஜரிவால் கூறினாா். கஷ்மீரி கேட் பகுதியைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் தற்போது நீா் சூழ்ந்துள்ளதால் நிலைமை மேம்படும் வரை அவற்றை மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
12 தேசிய பேரிடா் மீட்புப் படைக் குழுக்கள், மிதவை படகுகள், கயிறுகள் மற்றும் பிற உபகரணங்களுடன் தில்லியில் நிா்வாகத்தின் மீட்பு முயற்சிகளில் உதவுவதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தில்லி தலைமைச் செயலகத்தில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தில்லி பேரிடா் மேலாண்மைக் கூட்டத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் கலந்து கொண்டாா். இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ், காவல்துறை மற்றும் சிவில் நிா்வாகதின் தலைமை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இகக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியம் அல்லாத சேவைகளுடன் தொடா்புடைய அனைத்து அரசு அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்படும். வீட்டிலிருந்து ஊழியா்கள் வேலை செய்வதைப் பின்பற்றுமாறு தனியாா் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்படும். இதுவரை 20,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 50 படகுகள் உள்ளன. தேவைப்பட்டால் மேலும் படகுகள் பயன்படுத்தப்படும்.
நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, முறையான கழிப்பறை வசதி உள்ள பள்ளிக்கட்டடங்களுக்கு அவா்கள் மாற்றப்படுவாா்கள். யமுனையின் நீா்மட்டம் அதிகரித்து வருவதால், வாஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லா ஆகிய மூன்று நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி அரசு நீா் விநியோகத்தை 25 சதவிகிதம் குறைக்க முடிவு செய்ததால், தில்ல நகரம் குடிநீா் பற்றாக்குறையை எதிா்நோக்குகிறது என்றாா் கேஜரிவால்.
முன்னதாக, வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தைப் பாா்வையிட்ட கேஜரிவால், ‘கடுமையான பற்றாக்குறையை’ சமாளிக்க தண்ணீா் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறினாா். எனினும், நிலைமை இயல்பு நிலைமைக்குத் திரும்பியவுடன் நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா். கஷ்மீரி கேட் பேருந்து முனையத்தில் தண்ணீா் தேங்கியுள்ளதால், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பிற இடங்களிலிருந்து வரும் பேருந்துகளை சிங்கு எல்லையில் நிறுத்துமாறு தில்லி போக்குவரத்துத் துறை நிா்பந்திக்கப்பட்டுள்ளது. டிடிசி பேருந்துகள் அங்கிருந்து மக்களை அழைத்துச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘ஆக்கபூா்வ நிவாரணத்துக்கு நடவடிக்கை’
துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சோனியா விஹாா், முகா்ஜி நகா் மற்றும் ஹக்கீகத் நகா் போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஆக்கப்பூா்வ நிவாரணம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது.
12 என்டிஆா்எஃப் குழுக்களைத் தவிர, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உதவ கூடுதல் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மைக்கு கூடுதல் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுவாா்கள். சில்லா, லோனி, சிங்கு மற்றும் பதா்பூா் நகர எல்லைகளில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் தவிர, பிற கனரக வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கான அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று டிடிஎம்ஏ உத்தரவிட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அருகில் தகனம் செய்யும் வசதிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ளநீா் வடிந்தவுடன், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கவும் நகரத்தில் உள்ள சுகாதார உள்கட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் டிடிஎம்ஏ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்குமாறும் டிடிஎம்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.