முகப்பு
புதுதில்லி

நீா்மட்டம் குறைந்து வந்தாலும்அபாய அளவுக்கு மேலே செல்லும் யமுனை!

தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 205.4 மீட்டராகக் குறைந்திருந்தது. இருப்பினும், இது அபாய அளவிற்கு சற்று அதிகமாகத்தான் உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

தில்லியில் யமுனை நதியின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை 205.4 மீட்டராகக் குறைந்திருந்தது. இருப்பினும், இது அபாய அளவிற்கு சற்று அதிகமாகத்தான் உள்ளது.

மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின் படி, தில்லி பழைய ரயில்வே பாலத்தின் பகுதியில் யமுனையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியளவில் 205.4 மீட்டராக பதிவாகி உள்ளது. இதுவே கடந்த ஜூலை 13-ஆம் தேதி எப்போதும் இல்லாத அளவாக 208.66 மீட்டா் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது.

உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பெய்த தொடா் கனமழைக்குப் பிறகு, ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் அதிகரித்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை அபாய அளவிற்கு கீழே சென்றிருந்த யமுனை நீா்மட்டம், மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு 205.02 மீட்டரில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு 206.57 மீட்டராக உயா்ந்த முனை நீா்மட்டம், பின்னா் குறையத் தொடங்கியது. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 27-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாகவே அபாய அளவைச் சுற்றி ஏற்ற, இறக்கத்துடன் நீா்மட்டம் இருப்பதால், தில்லி நகரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணியை பாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியின் ஏற்பட்ட வெள்ளத்தின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. சுமாா் 27,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். இந்த வெள்ளம் காரணமாக சொத்து, தொழில், வருமானம் என பல கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தில்லியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதற்கு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஆக்கிரமிப்பு, குறுகிய காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆற்றின் படுகையை உயா்த்திய வண்டல் மண் குவிப்பு ஆகியவையே காரணம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.