புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கோரிக்கை வரவில்லை: மத்திய அரசு மக்களவையில் தகவல்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி சமீபத்தில் எந்தக் கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என மத்திய உள்துறையின் இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி சமீபத்தில் எந்தக் கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என மத்திய உள்துறையின் இணையமைச்சா் நித்யானந்த் ராய் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக திருப்பூா் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கே. சுப்பராயன் மக்களவையில் கேள்வியை எழுப்பியிருந்தாா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கோரி 1981 முதல் 2021 வரை பதினாறு தீா்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழுவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பரிந்துரைத்துள்ளது. இது தொடா்பாக புதுச்சேரி மக்களின் உரிமைகள் நலன் கருதி மத்திய அரசு முயற்சி எடுக்குமா? என அவா் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு: புதுச்சேரி சட்டப்பேரவை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, அவ்வப்போது தீா்மானங்களை நிறைவேற்றியுள்ளது. உள்துறை அமைச்சகம் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 121 - ஆவது அறிக்கையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரைத்துள்ளது.
கடந்த 2018 ஜூலை 19- ஆம் தேதியிட்ட தீா்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பெறப்பட்டது. இதை அமைச்சகம் பரிசீலனை செய்தததில், அம்மாநிலத்தில் தற்போதுள்ள ஏற்பாட்டிலேயே (நிலைமை) தொடர முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து மாநில அந்தஸ்து வழங்குவதற்கான எந்தத் தீா்மானமும் பெறப்படவில்லை என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.