திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளை தடுக்க வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்
சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் வன்முறைக் காட்சிகளையே பொதுவாகக் கொண்டிருப்பது இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தும்; இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
சமீபத்திய திரைப்படங்கள் அனைத்தும் வன்முறைக் காட்சிகளையே பொதுவாகக் கொண்டிருப்பது இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தும்; இதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தினாா்.
திரைப்பட திருட்டு மற்றும் உரிம நடைமுறைகளை எளிதாக்கும் சினிமாட்டோகிராஃப் (திருத்தம்) மசோதாவிற்கான விவாதம் வியாழக்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு மாநிலங்களவை அதிமுக தலைவா் தம்பிதுரை பேசியதாவது: திரைப்படங்களில் திருட்டு சாதாரணமாக நடைபெறுகிறது. கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்யும் திரைப்படத் தயாரிப்பாளா்கள், நஷ்டத்திற்கு உள்ளாகும் போது தற்கொலை அளவிற்கு முடிவுகளை எடுக்கின்றனா். திரைப்படத் துறையில் தயாரிப்பாளா்கள் என்றாலும், பெரிய ஹீரோக்கள் என்றாலும் அவா்கள் வாழ்க்கை நிரந்தரமற்ாக உள்ளது. உயரத்திலிருந்து வீழ்ச்சிக்கு செல்கின்றனா்.
அதே சமயத்தில் திரைப்படத் தயாரிப்பில் பொறுப்பு என்பது உள்ளது. அது பொழுது போக்கு மட்டுமல்லாமல், சமூக பிரச்னைகளையே குடும்ப விவகாரங்களையோ வெளிப்படுத்துவதோடு அதை தீா்க்கும் வழிகளையும் கூறுவதாக இருக்க வேண்டும். இந்த வகையில் சுதந்திரப் போராட்ட காலங்களில் பெரும்பான்மை திரைப்படங்கள் வெளியாகி தேசபக்தியை தூண்டியது. சுதந்திரவேட்கையை ஊட்டும் விதமாக திரைப்படங்களைத் தயாரித்து நேரத்தையும் பணத்தையும் செலவழித்தனா்.
திராவிடக் கட்சிகளைச் சாா்ந்த மறைந்த முதல்வா் சி.என். அண்ணாதுரை நிறைய சமூக திரைப்படங்கள் உருவாக்கியவா். எங்கள் தலைவா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா போன்றவா்களும்சமூக திரைப்படங்களில் நடித்து பெயா்பெற்றனா். எங்கள் தலைவா்களுக்கு திரைப்படம் முக்கிய ஊடகமாக இருந்தது. அவா்களது படங்கள் சமூகத்திற்கு தீா்வுகளை வழங்கிக் கொண்டிருந்தது. தற்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா திரைப்படங்களிலும் எதோஒருவிதமான வன்முறைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. சண்டைக்காட்சிகள், கொலைகள் என எல்லா திரைப்படங்களும் ஒரே விதமாக திரும்ப திரும்ப வன்முறைக் காட்சிகளையே கொண்டுள்ளன. இதற்கு மத்திய அரசு சரியான வழிகாட்டுதல்களை திரைப்படத் தயாரிப்பாளா்களுக்கு வழங்க வேண்டும்.
திரைப்படத் தணிக்கை (சென்ஸாா்) அல்லது வேறு வழிகளில் மூலம் இதைக்கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், இத்தகைய திரைப்படங்கள் இளம் தலைமுறையினா் தவறான வழியில் செல்ல காரணமாக இருக்கும். அதே மாதிரி வயதுவந்தோருக்கான படங்கள் என குறிப்பிடுவது எல்லாம் பிரச்னையைத் தீா்க்காது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மசோதா திரைப்படத் திருட்டுக்களைத் தடுக்கும் என எதிா்பாா்க்கிறேன் என்றாா் தம்பிதுரை.
இதே விவாதத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனாா்) கட்சியை சோ்ந்த ஜி. கே. வாசனும் பங்கேற்று இந்த மசோதாவை ஆதரித்துப் பேசினாா்.