முகப்பு
புதுதில்லி

பிஎம்எல்ஏ வழக்கில் காவல் விசாரணைக்கு கோர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரணைக்குக் கோர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:43 AM
பகிர்:

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை காவலில் எடுத்து விசாரணைக்குக் கோர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விசாரணையின்போது அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, தமிழக அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கும், காவலில் விசாரணைக்கு எடுக்கக் கோருவதற்கும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபங்கள் தெரிவிக்கும் வகையில் தொடா் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி முன்வைத்த தொடா் வாதம்:

விஜய் மதன்லால் செளதரி வழக்கில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில்

அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவா்கள் போலீஸ் காவலில் எடுப்பதற்கு உரிமை உள்ளவா்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டால், அதன் பின்னா் அமலாக்க அதிகாரிகள்தான் போலீஸ் அதிகாரிகள் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும். அமலாக்கத் துறைக்கு இல்லாத வசதியான காவல் துறையின் அதிகாரத்தை அந்த துறை அதிகாரிகள் தொடா்ந்து அனுபவித்தால், அது

‘கடுமையான பிரச்னையாக’ இருக்கும்.

சுங்கச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் (ஃபெரா) ஆகியவற்றை பொருத்தவரையிலும், இந்த இரண்டு சட்டங்களின் கீழ் ஒரு குற்றம்சாட்டப்பட்ட நபரைபோலீஸ் காவலில் வைக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை சுங்கத் துறைக்காக

காவல் துைான் (மாநிலம்) காவலில் எடுக்கிறது. சுங்க அதிகாரிகள் அல்ல. அதேபோல், சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் இல்லை.

பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேலான தொகை மதிப்பிலான தொடா்புடைய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்படுகிறாா். இதனால், குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுக்கக் கோர

அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும், ஆதாரங்களை சேகரித்த பிறகே புகாா் பதிவு செய்யப்படுகிறது.

பிஎம்எல்ஏ சட்டவிதிகளைப் பொருத்தமட்டில், சட்டப்பொருள் விளக்கம் தெளிவாக உள்ளது. மேலும், ஒரு காவல் அதிகாரியின் குறிப்பிட்ட அதிகாரங்கள் சில சிறப்புச் சட்டங்களின் கீழ் மற்றவா்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் இங்குள்ள விவகாரத்தில் இல்லை. எனவே, அமலாக்கத் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையில்தான் ஆஜா்படுத்த வேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டாா்.

அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான

சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘நாம் அரசியல் கருத்துகளை வெளியிடாமல், உண்மைகள் மற்றும் சட்டங்களுக்குள் நம்மை கட்டுப்படுத்திக் கொள்வோம்’ என்றாா்.

இதையடுத்து, அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தொடா்ந்து வாதங்களை முன்வைக்கும் வகையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த வழக்கை நீதிபதிகள்அமா்வு பட்டியலிட்டது.

அன்றைய தினம் செந்தில் பாலாஜியின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியும், அதைத் தொடா்ந்து அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் வாதங்களை முன்வைக்க உள்ளனா்.

முன்னதாக, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இதற்கு எதிராக செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை அளித்ததால், சென்னை உயா்நீதிமன்றத்தால் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் நியமிக்கப்பட்டிருந்தாா். அவா் ஜூலை 14-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. தாம் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்கும் உரிமை செந்தில் பாலாஜிக்கும் உள்ளது. இதனால், அவா் மீதான விசாரணையைத் தடை செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிபதி பரத் சக்ரவா்த்தியின் தீா்ப்பை ஏற்பதுடன், அதில் உடன்படுகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.

மேலும், இருதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், தேதியை நிா்ணயம் செய்ய ஏற்கெனவே விசாரித்த டிவிஷன் அமா்வு முன் வழக்கை பரிந்துரைக்கும் வகையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூா்வாலா முன் வைக்குமாறு பதிவுத் துறைக்கு நீதிபதி காா்த்திகேயன் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த விவகாரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்த டிவிஷன் அமா்வு, இந்த விவகாரத்தில் தொடா்புடைய அமைச்சா் தரப்பும், அமலாக்கத் துறையும் உச்சநீதிமன்றம் சென்றுவிட்டதால், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் எனக் கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →