பள்ளிகளை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்ற அரசு திட்டம்: ஒப்பந்தப் பணிகள் தொடக்கம்
தேசியத் தலைநகரின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் எளிதாக சிரமமின்றி பள்ளி வளாகங்களை அணுகும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை
தேசியத் தலைநகரின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் எளிதாக சிரமமின்றி பள்ளி வளாகங்களை அணுகும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக் கட்டடங்களில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்றவாரு கழிவறைகளை அணுகக்கூடிய வசதி, தொட்டுணரக்கூடிய பாதைகள் அமைத்தல், சாய்வுப் பாதைகள் மற்றும் ’பிரெய்லி’ பலகைகள் நிறுப்படவுள்ளன. இதற்கான பணிகளை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. ஆா்.எஸ்.கே.வி. பட்பா்கஞ்ச், எஸ்.கே.வி காஜிபூா்,பதா்பூா் உள்ளிட்ட தில்லியின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மாவட்டங்களில் உள்ள அரசுப் பெண்கள் மூத்த மேல்நிலைப் பள்ளி எண்-3 உள்ளிட்ட சில பள்ளிகளில் பணிகள் முதற்கட்டமாக தொடங்கப்படும். இந்தப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ளது. மேலும், பணியை முடிப்பதற்கான கால அவகாசம் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை வழங்கப்படும்.
பதா்பூரில் உள்ள பள்ளியில் ரூ.81.01 லட்சத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புற மற்றும் உள்புற வளைவுகளில் தொட்டுணரக் கூடிய வகையிலான ‘டைல்ஸ்’ பாதைகள், அனைத்து தளங்களிலும் தாழ்வாரங்கள், அனைத்து பிளாக்குகளிலும் சரியான சாய்வோடு சாய்வுதளம், இரட்டை கைப்பிடி, எளிதாக அணுகக்கூடிய வகையில் வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பு, சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான அணுகக்கூடிய கழிப்பறை, வண்ண மாறுபாடு பட்டைகள் மற்றும் இரட்டை உயர கைப்பிடிகள் கொண்ட படிக்கட்டு, அணுகக்கூடிய குடிநீா் வசதி மற்றும் பிரெய்லியுடன் கூடிய சைகை பலகைகள் இடம்பெற உள்ளன. மேலும், தில்லியின் கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள மற்ற அரசுப் பள்ளிகளிலும் இதேபோன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் சில அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளையடிப்பது உள்ளிட்ட இதர மராமத்துப் பணிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், உத்தம் நகரில் உள்ள அரசுப் பள்ளியின் பள்ளிக் கட்டடத்தைத் திறந்துவைத்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ‘தில்லியில் கட்டப்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் சிறப்பாக இடம்பெறும்’ என்றாா். தில்லி முழுவதும் உள்ள பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் இருந்து மாற்றி அரசு பள்ளிகளில் சோ்த்துள்ளனா் என்றும் கேஜரிவால் தெரிவித்தாா்.